மஹிந்த- துறைமுக நகரம் (Port City) மைத்திரி- நிதி நகரம்(Financial City)




(சிறாஜ் மசூர்)
காலி முகத் திடலை (Galle Face) நம்மிடமிருந்து நிரந்தரமாகக் கொள்ளையடித்து விட்டார்கள்!
துறைமுக நகரம் (Port City), நிதி நகரமாக (Financial City) மாறிய பகல் கொள்ளை!!
கொழும்பின் சந்தடிக்கும் பரபரப்புக்கும் மத்தியில், நமக்கு இருக்கும் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில ஆறுதல்களுள் காலி முகத் திடலும் ஒன்று. அதை இப்போது பட்டப் பகலில் இந்த ஆட்சியாளர்கள் கொள்ளையடித்து விட்டார்கள்.
முன்பு மஹிந்த அரசு சீனாவிடம் கைகுலுக்கி, கொழும்பு துறைமுக நகரம் என்ற பெயரில் சரணாகதி அடைந்தது. இப்போது மைத்திரி -ரணில் அரசு அதற்கு 'கொழும்பு சர்வதேச நிதி நகரம்' என்று பெயர் மாற்றி பேய்க்காட்டுகிறது.
ஆட்சி மாற்றத்திற்கு முன்பு இதற்கு எதிராகப் பேசி, தாம் ஆட்சிக்கு வந்தால் துறைமுக நகரை நிறுத்துவோம் என்று கொக்கரித்ததையெல்லாம் வசதியாக மறந்து விட்டு, முழு நாட்டையும் ஏமாற்றியிருக்கிறார்கள்.
இந்தப் புது நகரம் மூலம், நவ தாராளவாத (Neo Liberal) பெரு முதலாளிகளே அதிகம் நன்மை அடைய போகிறார்கள்.
நமது பொருளாதாரம் கடுமையாக சுரண்டப் படப் போகிறது.
இலங்கையின் சட்டங்கள் இங்கு செல்லுபடியாகாத வகையில், விசேட விலக்கு அளிக்கப்படப் போகிறது.
நமது இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டு கொள்ளையிடப்படப் போகின்றன.
களியாட்டக் காரர்களாலும், சூதாட்டக் காரர்களாலும் நமது பண்பாட்டுச் சூழல் மாசடைய போகிறது.
இன்னும் இன்னும் எத்தனையோ...

மொத்தத்தில், சீன- இந்திய- அமெரிக்க புவியரசியல் (Geopolitics) சூதாட்டத்தில் நாம் நிரந்தர பலிக்கடாக்களாக மாற்றப்பட்டு விட்டோம்.
இந்த அடிமைச் சாசனம் மூலம், இலங்கையின் கடல் இறைமை காவு கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆக, சத்தமில்லால் நமது நாட்டுக்குள் சீன காலனியொன்று உருவாக்கப்படுகிறது. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர், நவ காலனிய வரிசையில் அமெரிக்கா, ஐரோப்பா - இப்போது சீனா.
ஆனால், இந்த சீன நவ காலனித்துவத்தின் வடிவம் முற்றிலும் மாறுபட்டது

மக்களுக்கு வகை கூறுவதும் (Accountability), வெளிப்படைத் தண்மையும் (Transparency) நல்லாட்சியின் அடிப்படிப் பண்புகள். அதை அப்பட்டமாக மீறிச் செய்யப்படும் இந்த ஆட்சி குறித்து நாம் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டியிருக்கிறது. ராஜபக்சவின் அராஜக ஆட்சியைத் தூக்கி வீசிய நாம், அரசின் இந்தக் கண் கட்டு வித்தையைக் கண்டும் காணாது இருந்து விட முடியாது.
ஆதலால், இந்த அரசின் மக்கள் விரோத செயற்பாடுகளை எதிர்ப்பது நமது கடமை; கூட்டுப் பொறுப்பு.