ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், இனிங்ஸொன்றில் அதிக ஓட்டங்களைக் குவித்த அணி என்ற இலங்கை அணியின் சாதனை கடந்த வாரம் பறிபோயிருந்த நிலையில், சற்று முன்னர், இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்த அணி என்ற இலங்கை அணியின் சாதனையையும் பறிபோயுள்ளது.
இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில், பல்லேகெலயில் இடம்பெற்ற முதலாவது இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, மூன்று விக்கெட்டுக்களை இழந்து 263 ஓட்டங்களைப் பெற்று, இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்த அணி என்ற சாதனையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னர், இலங்கையணி, 2007ஆம் ஆண்டு உலக இருபதுக்கு-20 போட்டிகளில், கென்யாவுக்கெதிராக, ஆறு விக்கெட்டுக்களை இழந்து 260 ஓட்டங்களைப் பெற்றதே, இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் குவிக்கப்பட்ட அதிக ஓட்ட எண்ணிக்கையாக இருந்தது.

