அஸ்பெஸ்டோஸ் (Asbestos sheet) பயன்படுத்தப்படும் உற்பத்திகளின் பாவனை, இறக்குமதி மற்றும் உற்பத்தி ஆகியவற்றினை இலங்கையில் முற்றாக தடை செய்வதற்காக அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, அஸ்பெஸ்டோஸ் பயன்படுத்தப்படும் உற்பத்திகளின் பாவனை, இறக்குமதி மற்றும் உற்பத்தி ஆகியவற்றினை 2018 ஜனவரி 01ஆம் திகதியில் இருந்து கட்டுப்படுத்துவதற்கும், 2020 ஜனவரி 01ஆம் திகதியில் இருந்து குறித்த உற்பத்திகளை முற்றுமுழுதாக அகற்றுவதற்கும் தேவையான நடவடிக்கைகள் அடங்கிய வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்படவுள்ளது.
பல்வேறுபட்ட உற்பத்தி பொருட்களின் மூலப் பொருளாக அஸ்பெஸ்டோஸ் கனியவளம் பயன்படுத்தப்படுகின்றது. உலக சுகாதார அமைப்பின் மூலம் (WHO) புற்றுநோய் காரணியாக இனங்காணப்பட்ட நீல அஸ்பெஸ்டோஸ் (Crocidolite) இலங்கையில் இறக்குமதி 1987ம் ஆண்டு முதல் தடைசெய்யப்பட்டது.
இன்று இலங்கையில் அதிகமாக பயன்படுத்தப்படும் வெள்ளை அஸ்பெஸ்டோஸ் (Chrystel) வகையினங்களும் புற்றுநோயை ஏற்படுத்தும் நோய் காரணிகளாக இனங்காணப்பட்டுள்ளது.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்ற வெள்ளை அஸ்பெஸ்டோஸ் (Chrysolite) வகையினங்கள் அதிகமாக கூறை தகடுகளுக்காகவே பயன்படுத்தப்படுகின்றன.
அதனடிப்படையில் வெள்ளை அஸ்பெஸ்டோஸ் (Chrysolite) பயன்படுத்துவதால் ஆரோக்கியத்திற்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களை குறைத்து மக்களின் வாழ்க்கை தரத்தை இலாபகரமானதாக மாற்றிக் கொள்வதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

