தங்களுடைய மேய்ச்சல்தரைப் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத் தருமாறு மட்டக்களப்பு மாவட்டப் பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகப் பிரிவில் இம்முறை மேற்கொள்ளப்படவுள்ள பெரும்போகச் செய்கைக்கான ஆரம்பக் கூட்டம், அப்பிரதேச செயலாளர் எஸ்.தனபாலசுந்தரம் தலைமையில் கிரான் றெஜி மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எஸ். கிரிதரன் கலந்து கொண்டு உரையாற்ற முற்பட்டபோது மேற்படி கோரிக்கையை முன்வைத்து பண்ணையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் எதிர்ப்பையும் தெரிவித்தனர்.
குறித்த நிலவரத்தை அறிந்த கிழக்கு மாகாண விவசாய அமைச்சர், பண்ணையாளர்களின் எதிர்ப்பை ஏற்றுக் கொண்டு, இப்பிரச்சினையை எடுத்த எடுப்பில் தீர்க்க முடியாமல் உள்ளதுடன், இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சிறிது காலம் தேவை என்றார்.
இதன் பின்னர் கூட்டம் சுமூகமாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் வேளையில், பாரம்பரிய மேய்சல் தரையாகப் பாவிக்கப்பட்டு வந்த பிரதேசமானது, இப்போது பொலன்னறுவை, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களால் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படுகின்றது.
இதேவேளை, குறித்த மேய்ச்சல் தரையில் நுழையும் தங்களுடைய கால்நடைகள் அவர்களால் கொல்லப்படுவதும் அதே நேரத்தில் கட்டப்பட்டு தண்டப்பணம் கோருவதும் இடம்பெற்று வருகிறது.
இதன் காரணமாக தாம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதுடன், பாரிய நட்டமும் ஏற்பட்டுள்ளதாக மாதவணை, மயிலத்தமடு பிரதேசங்களில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வரும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
இப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர்கள் கூறினார்.

