வெற்றிப் பாதையில்



விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு ஒரு விரைவான பயணமாக அல்லாமல் அமைதியாகவும் அதேநேரம் ஒரு வெற்றிகரமான செயற்திட்டத்தினூடாகவும் நாட்டை வெற்றிப் பாதையில் வழிநடத்திச் செல்வதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலின்போது பொதுவேட்பாளராக நேரடியாக செயற்பட்ட பல்வேறு நிறுவனங்கள், தொழிற்சங்கங்களுடன் இடம்பெற்ற ஒரு சுமுகமான சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.
இச்சந்திப்பு நேற்று (13) மாலை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.
பொதுவேட்பாளரை வெற்றிபெறச் செய்து நாட்டுக்கும் மக்களுக்கும் தேவையான மாற்றத்தை பெற்றுக்கொடுக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்ட எல்லோருக்கும் இதன்போது தமது நன்றிகளை தெரிவித்துக்கொண்ட ஜனாதிபதி, எதிர்காலத்திலும் அவர்கள் எல்லோரினதும் கருத்துக்கள் முன்மொழிவுகளுக்கு இடமளித்து, நாட்டை வெற்றிப்பாதையில் இட்டுச் செல்வதாக தெரிவித்தார்.
தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களை 24 மணி நேரத்தில் செய்து முடிக்க முடியுமாக இருந்தால், அவற்றை தாம் ஒரு கையொப்பத்தில் செய்து முடிக்க தயார் என்றபோதும், அது அவ்வாறு செய்யக்கூடியவை அல்ல எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நாடு முகங்கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடிகள் மற்றும் சர்வதேச நிலைமைகளை கருத்திற்கொண்டு நாம் செல்ல வேண்டியது மிகவும் கவனமானதும் மெதுவானதுமான ஒரு பயணமாகும் என்றும் குறிப்பிட்டார்.
பிரச்சினைகளை கலந்துரையாடல்களின் மூலமாக தீர்த்து மக்கள் எதிர்பார்க்கின்ற மாற்றங்களின் ஊடாக இணக்க அரசாங்கத்தின் பயணத்தை முன்னெடுத்துச் செல்வதே தமது நோக்கமாகும் என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.