கிளிநொச்சி பூநகரி பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
பூநகரி பிரதேச செயலகத்தில் ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தின்போது மீள்குடியேற்றம், கல்வி, விவசாயம், வீதி அபிவிருத்தி உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன.
இன்றைய கூட்டத்தின் போது நீரியல் வளத்துறை உத்தியோகத்தர் ஒருவரை பதவியில் இருந்து வெளியேற்றுவதாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அச்சுறுத்தியதாக, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வட மாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன் குற்றஞ்சாட்டினார்.
இந்த விடயம் தொடர்பில் இராஜாங்க அமைச்சரின் இணைப்பாளருக்கும், வட மாகாண சபையின் உறுப்பினர்களான வை.தவநாதன் மற்றும் சு. பசுபதிப்பிள்ளைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதேவேளை, தனியார் காணி ஒன்று சம்பந்தமாக எழுந்த வாதப்பிரதிவாதங்களை அடுத்து, பூநகரி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இருந்து இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வெளிநடப்புச் செய்தார்.

