யாழ்.மாவட்ட செயலகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நிர்வாக அலுவலக கட்டிடத்தினை இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இணைந்து இன்று (17) திறந்து வைத்தனர்.
யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இன்று சனிக்கிழமை காலை 11.00 மணியளவில் தமிழ் இன்னிசை வாத்தியங்கள் முழங்க, சம்பிரதாய முறைப்படி பிரதமர் வரவேற்கப்பட்டார்.
பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் புதிதாக அமைக்கப்பட்ட 3 மாடிக் கட்டிடத்தினை பிரதமர் நாடா வெட்டித் திறந்து வைத்ததுடன், கட்டிடத்தில் பொறிக்கப்பட்டிருந்த நினைவுக்கல்லினை திரை நீக்கம் செய்து வைத்தார்.நாட்குறிப்பு புத்தகத்திலும் கையொப்பமிட்டார்.
இந்த நிகழ்வில், இந்து கிறிஸ்தவ பௌத்த மற்றும் இஸ்லாம் மதத்தலைவர்கள், உள்ளூராட்சி அமைச்சர், மீள்குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், சிறுவர் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், வடமாகாண சபை உறுப்பினர்கள், யாழ்.மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.

