சிகை அலங்கார ஊழியர் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் ஹட்டன் தலைமையக பொலிஸ் இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நுவரெலியா தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அவர் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
மேலும் தாக்குதலுக்கு இலக்கானவர் தொடர்பான சட்ட வைத்திய அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஹட்டன் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஹட்டன் நகரிலுள்ள சிகை அலங்கார ஊழியர் ஒருவர் மீது நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹட்டன் தலைமையக பொலிஸ் இன்ஸ்பெக்டருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டது.
தனிப்பட்ட தேவைக்கு அழைத்து தம்மீது தாக்குதல் நடத்தப்பட்டதோடு தகாத வார்த்தை பிரயோகங்களையும் பயன்படுத்தியதாக பாதிக்கப்பட்ட ஊழியர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை அடுத்து நேற்று ஹட்டன் நகரில் , சிகை அலங்கார நிலைய ஊழியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிட்டத்தக்கது.

