(க.கிஷாந்தன்)
பாடசாலை விடுமுறையோடு, அரச விடுமுறையும் அமைய பெற்றிருந்ததால் மத்திய மாகாணத்திற்கு வருகை தரும் சுற்றுலா பிரயாணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்பட்ட போதிலும் அவர்களின் செயற்பாடுகள் வரவேற்கதக்கதாக அமையவில்லை என்றே கூறனும்.
உணவு பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களை சூழலில் வீசிவிட்டு செல்வதால் சூழல் மாசடைவதோடு நுளம்புகளும் பரவுவதற்கு வாய்ப்புள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான நிலைமைகளை அட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் டெவோன் மற்றும் சென்கிளயார் பகுதியிலுள்ள, நீர்வீழ்ச்சிகளை பார்வையிட வரும் சுற்றுலா பிரயாணிகளின் செயற்பாடுகளினால் அவதானிக்க முடிகின்றது.
நுவரெலியா பிரதேச சபையால் குறித்த நீர்வீழ்ச்சிகளுக்கு அருகாமையில் குப்பைத் தொட்டியொன்று வைக்கப்பட்டிருந்தாலும் அதனுள் குப்பைகளை போடாமல் வெளியிடங்களில் வீசியெறிந்துவிட்டு செல்வதால், பாரிய அசௌகரியங்களுக்குள்ளாவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இப்பகுதிகளுக்கு சுற்றுலா பிரயாணிகள் தங்களது உணவு பொருட்களை ஆங்காங்கே கொட்டி எரிந்து வருகின்றனர். இதன் போது குரங்குகள், கட்டகாலி நாய்கள் மற்றும் பறவைகள் ஆகியன உணவுகளை உண்ணும் அதேவேளை அவ்விடங்களிலிருந்து தூக்கி செல்வதால் வீதிகள் மாசடைவதுடன் குப்பைகள் வீதிகளில் பரவக்கூடிய நிலை ஏற்படுகின்றது.
சுற்றுலா பயணிகள் வீசிச் செல்லும் யோகட் கோப்பைகள், பொலித்தீன் பைகள் ஆகியவற்றில் நீர் நிறைந்து நுளம்பின் பெருக்கம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கின்ற அதேவேளை, பிரதேசத்தில் துர்நாற்றம் வீசிவருவதாக தெரிவிக்கும் மக்கள், இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென் கோரிக்கை விடுக்கின்றனர்.
இப்பிரதேசங்களுக்கு வரும் சுற்றுலா பிரயாணிகளின் இவ்வாறான செயற்பாடுகளை தவிர்த்துக்கொள்வார்களாயின் இவ் சூழலை பாதுகாப்பது சிரமம் அல்ல.
இவ் கானோளியை பதிவு செய்துக்கொண்டிருக்கும் பொழுது 5 அறிவு படைத்த குரங்கு ஒன்றிடம் 6 அறிவு படைத்த மனிதன் ஒருவன் தான் புகைத்த சிகரட்டை வழங்கிய போது அறிவு பூர்வமாக சிந்தித்த 5 அறிவு படைத்த குரங்கு இலாபகமாக தவிர்த்துக்கொள்ளும் காட்சி எமது கெமராவில் பதிவானமை குறிப்பிடதக்கது.

