ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எப்.சி.ஐ.டி., சி.ஐ.டி., மற்றும் லஞ்ச ஊழல் திணைக்களம் என்பன குறித்து தெரிவித்த அதே கருத்தில் தான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
கேகாலை, வட்டாரம பிரதேசத்தில் இன்று (14) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
நேற்றிரவு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. அந்த கலந்துரையாடலில் நாமும் கலந்துகொண்டோம். ஜனாதிபதி தெரிவித்த கருத்துக் குறித்து பல்வேறுவிதமான கருத்துக்கள் தெரிவிக்கப்படுவதனால் ஜனாதிபதி அதனைத் தெளிவுபடுத்தினார்.
நாம் அமைத்த நல்லாட்சி அரசாங்கத்துக்காக ஜனாதிபதியின் முழுமையான பங்களிப்பு உண்டு என ஜனாதிபதி தெரிவித்தார். நல்லாட்சியை தொடர்ந்தும் கொண்டு செல்வதற்கும் இந்நாட்டின் சட்டம் இறைமையை நுாற்றுக்கு நுாறு வீதம் பாதுகாப்பதற்கும் ஜனாதிபதியும் எமது அரசாங்கமும் கடமைப்பட்டுள்ளதாகவும் பிரதமர் இதன்போது எடுத்துக் கூறினார்.
ஜனாதிபதியினால் நிகழ்த்தப்பட்ட கடந்த உரையில் பிரச்சினைக்குரிய ஒரு இடம் காணப்பட்டது. முன்னாள் இராணுவத் தளபதி அல்லது இராணுவத்திலிருந்த அதிகாரிகள் ஆகியோரில் யாரையாவது நீதிமன்றத்துக்கு அழைக்கப்படும் போது, அது தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கும், ஜனாதிபதி அல்லது பிரதமர் ஆகியோருக்கும் அறிவுறுத்தல் வேண்டும் என்பதுவே அதுவாகும்.
ஜனாதிபதியின் இந்த நிலைப்பாட்டில் தான் பிரதமரும் காணப்படுகின்றார். இந்த இருவருக்கும் அறிவிக்கப்படாமல் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதுவே ஜனாதிபதி அன்று விடுத்துள்ள செய்தியாகும் எனவும் அமைச்சர் கபீர் ஹாசிம் இன்று விளக்கமளித்துள்ளார்.

