மட்டக்களப்பு மாவட்டத்தில் 67 வீதமானவர்கள் கல்வியறிவு உடையவர்கள்



ஆகக்குறைந்த கல்வி மட்டத்திலிருந்து மீட்டெடுக்க அனைவரும் உறுதி கொள்ள வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று(10) காலை நடைபெற்ற மாவட்ட செயலக வாணி விழா நிகழ்வில் தலைமையுரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து உரையாற்றிய அரசாங்க அதிபர்,
இலங்கையின் கல்வியானது வெறுமனே சான்றிதழ்களுக்கான கற்கையாகவே அமைந்திருப்பதாக அண்மையில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இதில் மாற்றத்தினை ஏற்படுத்திக் கொள்ளும் போதே உலக மயமாக்கலில் உள்வாங்கப்படுவோம் என்ற கருத்து வேகமாகப் பரவி வருவதாக தெரிவித்துள்ளார்.
சாதாரண தரம், உயர்தரம், பல்கலைக்கழகக் கல்வியாக இருந்தாலும் நாம் ஒரு சான்றிதழைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அரச உத்தியோகம் ஒன்றினைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஒரு நோக்கத்துடன் மட்டு படுத்தப்பட்டவர்களாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
கல்வி என்பது ஒரு மனிதனை முழுமையடைய வைப்பதற்காக அவனுடைய சகல ஆற்றல்கள், அறிவு, மனப்பாங்கு உள்ளிட்ட அனைத்தையும் மேம்படுத்திக் கொண்டு அதன் ஊடாக இந்த சமூகத்துடன் சமூகமயமாக்கிக் கொள்வதற்காக மாற்றிக் கொள்வதேயாகும் என குறிப்பிட்டுள்ளார்.
கல்வி என்பதே சமூக மாற்றத்துக்கான முக்கியமான ஒன்று என்பது நெல்சன் மண்டேலா சுதந்திரப் போராட்டத்தின் பின் கூறிய முக்கியமானதொரு கருத்தாகும்.
எனவே கல்வியின் ஊடாக ஒரு சமூகத்தில் மாற்றம் ஏற்படுமாக இருந்தால் பொருளாதார மாற்றம், வளர்ச்சி, தனிமனித ஆளுமை, ஆற்றல் மற்றும் சமூகத்தில் இருக்கின்ற பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு நிறைவு பெற்றவர்களாக வாழக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படும்.
வெறுமனே விழாவைக் கொண்டாடுவது மாத்திரமல்லாமல் விழாவின் நோக்கத்தினையும் உணர்ந்தவர்களாக இருந்தால் நிச்சயமாக சமூக மாற்றம் ஏற்படும் என தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 67 வீதமானவர்கள் கல்வியறிவு உடையவர்களாக இருக்கின்றனர். இலங்கையிலேயே மிகக் குறைந்த கல்வி அறிவு உடைய மட்டம் என்பது தான் இதன் பொருள்.எமது மாவட்டத்தில் கல்வி அறிவு என்பதும் கல்வியைத் தொடர முடியாது என்கிற நிலையுமே பிரச்சினையாக இருக்கின்றது. எனவே இந்த நிலையை மாற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று உறுதியளிக்கின்ற நாளாக இந்த நாளைப் பயன்படுத்திக் கொள்வோம்.
இதில் பாடசாலை மாணவிகளின் நடன, பஜனை நிகழ்வுகளும் நடைபெற்றதுடன், வருடா வருடம் நடைபெறும் கலை வாணி கல்வி உதவி வழங்கும் நிகழ்வும் நடைபெற்றன. இதில் 15மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்வில். மாவட்ட செயலக பதவி நிலை மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.