வழமையாக பனி மூட்டமாகக் காணப்படும் பதுளை நகரம், இன்று மீத்தேன் வாயுவினால் சூழ்ந்து காணப்பட்டது.
நகரிலுள்ள குப்பை மேட்டில் தீ பரவியமையே இதற்குக் காரணமாகும்.
சன நெரிசல் மிகு நகர மத்தியில், பதுளை மாநகர சபையினால் இயக்கப்படும் மீள்சுழற்சி நிலையத்திற்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை இரவு தீ பரவ ஆரம்பித்தது.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, இலங்கை விமானப்படையின் ஹெலிகொப்டர்கள் தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டன.
எனினும், குப்பை மேட்டில் கிடந்த பொலித்தீன்கள் தீப்பற்றியதால், அதிலிருந்து வெளியேறும் விஷம் கலந்த புகையைக் கட்டுப்படுத்த முடியாதுள்ளது.
விஷம் கலந்த புகை காரணமாக, எதிர்வரும் வௌ்ளிக்கிழமை வரை 8 பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கு, ஊவா மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
பதுளை தர்மதூத வித்தியாலயம், ஊவா மகாவித்தியாலயம், விகாரமகாதேவி பாலிகா வித்தியாலயம், பதுளை மத்திய மகா வித்தியாலயம், விசாகா பாலிகா வித்தியாலயம், சுஜாதா பாலிகா வித்தியாலயம், அல் அதாம் வித்தியாலயம் மற்றும் அல் அல் இஸ்மத் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கே தற்காலிக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந்த பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் இன்று முகமூடிகளை அணிந்திருந்தமையை அவதானிக்க முடிந்தது.
அதிகப் புகையை சுவாசித்த பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 30 பேர், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பதுளை பொது வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
குப்பை மேட்டிற்கு சிலர் திட்டமிட்டு தீ மூட்டியுள்ளதாக, இதனால் பாதிக்கப்பட்டுள்ள பதுளை மக்கள் தெரிவித்தனர்.

