-எஸ்.எம்.அறூஸ்
வடக்கு மற்றும் ஏனைய மாகாணங்களிலுள்ள பாடசாலைக்கு நியமனம் பெற்ற கிழக்கு வாழ் ஆசிரியர்களை கிழக்குப் பகுதியில் உள்ள பாடசாலைக்கு விடுவித்துத் தருவதற்கு கல்வி அமைச்சின் செயலாளர் இணக்கம் தெரிவித்துள்ளதாக சுகாதாரப் பிரதியமைச்சர் பைசல் காசீம், நேற்றுத் திங்கட் கிழமை (10) தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம், கல்விக் கல்லூரியிலிருந்து வெளியாகிய ஆசிரியர் நியமனம் பெற்ற கிழக்கு மாகாண ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளரை, சுகாதார பிரதியமைச்சர் பைசல் காசீம் நேற்றுச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன் நிமித்தமாக கிழக்கு மாகாணத்ததைச் சேர்ந்த ஆசிரியர்களை அவர்களது மாகாணத்துக்குள் நியமிப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதுடன், அது சம்பந்தமாக விரைவாக நடவடிக்கை எடுப்பதற்கும் செயலாளர் உறுதியளித்துள்ளார்.
எனவே, எதிர்வரும் 2016.10.13ஆம் திகதிக்கு முன்னர், வெளி மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்ட கிழக்கு மாகாண ஆசிரியர்கள், தங்களது பிரச்சினைகள் அடங்கிய கடிதத்தை, கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
மேலும், பிரதியினை சுகாதார பிரதியமைச்சர் பைசல் காசீம் அவர்களுக்கும் அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

