காத்தான்குடி்யின் சில இடங்களில் சிகரெற் விற்பனை நிறுத்தம்





(HUSSAIN)

நாடளாவிய ரீதியில் ஜனாதிபதியினால் முன்மொழியப்பட்டுள்ள போதைப் பொருள் பாவனைக்கெதிரான செயற்திட்டங்களுக்கமைவாக மட்டக்களப்பு காத்தான்குடியில் உள்ள 17 வர்த்தக நிலையங்கள் சிகரெற் விற்பனையை நிறுத்தியுள்ளதாக காத்தான்குடி பொதுச் சுகாதார பரிசோதகர் எம். றஹ்மதுல்லாஹ் தெரிவித்தார்.

இளைஞர்கள், மாணவர்களிடத்தில் போதைப் பொருளை ஒழிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் காத்தான்குடி ஜம் இய்யதுல் உலமா காரியாலயத்தில் புதன்கிழமை இரவு  (26.10.2016) இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் உலமாக்கள், ஜம் இய்யதுல் உலமா சபை நிருவாகிகள் மற்றும் சமூக நல செயற்பாட்டாளர்கள் மத்தியில் மேலும் தெரிவிக்கையில்ளூ
காத்தான்குடி வர்த்தக பிரதேசத்தில் பிரதானமாக சிகரெற் வியாபாரத்தை மேற்கொண்டு வந்த 17 வர்த்தக நிலையங்கள் சிகரெற் விற்பனையை முற்றுமுழுதாக நிறுத்தியுள்ளன.

இதனால் காத்தான்குடியில் நாளொன்றுக்கு சுமார் 6 இலட்சம் ரூபாய் சிகரெற் விற்பனையில் சரிவைக் கண்டுள்ளதாக அந்நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எதிர்கால சந்ததியினரின் நன்மை கருதியே வர்த்தகர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இது ஒரு முன்மாதிரியாகும்.
இவ்வாறு அனைவரும் செயற்பட்டால் போதையற்ற, ஆரோக்கியமான, சமூகச் சீரழிவுகள் அற்ற பிரதேசமாக இப்பகுதியை உருவாக்க முடியும்.
மாணவர்கள், இளைஞர்கள், குடும்பஸ்தர்கள் என்று பலர் இப்பொழுது இந்த புகைத்தலுக்கு அடிமையாகியுள்ளனர்.


அவர்களை நாம் அதிலிருந்து மீட்டெடுக்க வேண்டும். போதைப் பொருள் பாவனையால் எதிர்கால சந்ததி ஆரோக்கியமற்றதாக உருவாக அனுமதிக்கக் கூடாது' என்றார்.