(சிறாஜ் மசூர்)
ஆதில் பாக்கிர் மாக்காரின் திடீர் மரணச் செய்தி கிடைத்தபோது அதிர்ச்சியாக இருந்தது. சில நிமிடங்கள் செய்வதறியாது திகைத்து நின்றேன். பலரைத் தொடர்பு கொண்டு, என்ன நடந்தது என்று கேட்டு அறிந்து கொண்டேன். இன்னமும் அந்த அதிர்ச்சியிலிருந்து முழுமையாக விடுபட முடியவில்லை.
முன்னாள் அமைச்சரும், அண்மையில் உருவாக்கப்பட்ட தேசிய ஊடக மையத்தின் தவிசாளருமான இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் நான்காவது மகன் ஆதில்.
மிகவும் திறமைசாலியான அவர், தலைமைத்துவப் பண்புகள் நிறைந்த ஒருவர். நமது நாடு நல்லதொரு எதிர்காலத் தலைவனை இழந்து விட்டது. இது ஒன்றும் மிகையான கூற்று அல்ல.
இலங்கை சட்டக் கல்லூரியில் Atorney at Law வைப் பூர்த்தி செய்து விட்டு, புகழ் பூத்த London School of Economics and Political Science இல் ஒப்பீட்டு அரசியல் துறையில் உயர் கல்வியைத் தொடர சமீபத்தில்தான் லண்டன் சென்றிருந்தார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பான பணிப்பாளராகவும் இருந்தார். 2015 இல் ஐ.நா.சென்ற இலங்கை இளைஞர் தூதுக்குழுவில் அங்கம் வகித்தார்.
புகழ் பெற்ற பாக்கிர் மாக்கார் குடும்பத்தின் புதிய தலைமுறை அரசியல் வாரிசாக பலராலும் கருதப்பட்ட அவர் பிறந்தது 1990 இல். இறக்கும்போது அவருக்கு 26 வயது.
இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் நற்பண்புகள் நிறைந்தவர். அனைவருடனும் இன்முகத்தோடு பழகுபவர். அவரது பிள்ளைகள் எல்லோருமே பண்பானவர்கள்; பணிவானவர்கள்.
அவருடைய மூத்த மகன் அஸாஃப் Conflict Resolution and Peace Studies துறையில் என்னோடு கொழும்பு பல்கலைக்கழக MA கற்கைநெறியில் இணைந்தார். அந்த வகுப்பில் Munas Kalden உம் எங்களோடு கல்வி கற்றார். நான் அதைத் தொடரவில்லை. பல காரணங்களால் இடைநடுவில் கைவிட வேண்டி வந்தது.
அந்த நாட்களில் அவரோடு பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. எப்போதும் முஸல்லாவை மறக்காமல் எடுத்து வருவார். நாங்கள் ஒன்றாகத் தொழுவோம்.
பின்னர் அஸாம் பாக்கிர் மாக்காருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. இன்று வரை அந்த உறவு தொடர்கிறது.
ஃபாதில், ஆதில் ஆகியோருடன் ஒப்பீட்டளவில் பழகியது குறைவு. ஆனாலும் அவர்கள் எல்லோருமே பழகுவதற்கு மிகச் சிறந்தவர்கள். கடைசியாக அவரைக் கண்டது பேராசிரியர் தாரிக் ரமழானின் இலங்கை விஜயத்தின்போதுதான்
இன்று காலை, எங்களோடு அரசியல் செயல்பாட்டில் இணைந்து செயற்படும் இளம் நண்பர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். ஒரு மாதத்திற்கு முன்னர் ஆதில் பாக்கிர் மாக்காரை அவர் சந்தித்தபோது, 'சிராஜ் நானாவும் நஜா நானாவும் இன்ன இடத்தில் இப்படி இப்படி வர வேண்டும்' என்று கூறியதாகச் சொன்னார். கொஞ்சமும் எதிர்பார்த்திராத தகவல். அவருக்காகப் பிரார்த்திப்போம்.
அல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து ஃபிர்தௌஸுல் அஃலாவை அருள்வானாக.
மதிப்புக்குரிய இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் நான் மிகவும் மதிக்கும் அரசியல்வாதி. ஒரு அரசியல்வாதியின் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவரது ஐந்து புதல்வர்களும் மிகச் சிறந்த முன்மாதிரிகளாக உள்ளனர்.
இன்று மாலை புல்லர்ஸ் லேனிலுள்ள அவர்களது வீட்டுக்குச் சென்றபோது, பல்லின மக்களும் ஒன்றுதிரண்டிருந்தனர். ஆதிலின் மீதும், அந்தக் குடும்பத்தினர் மீதும் அவர்கள் அனைவரும் கொண்டிருக்கும் அன்பையும் மரியாதையையும் அங்கு மனதார உணர முடிந்தது.
அல்லாஹ் அவர்களது குடும்பத்தினருக்கு பொறுமையையும் ஆறுதலையும் அளிப்பானாக.

