-ஏ.எஸ்.எம்.முஜாஹித்
அம்பாறை மாவட்டத்தில்; வரவு –செலவுத்திட்டத்தில் அமுல்படுத்தப்பட்ட தீர்வையற்ற மோட்டார் சைக்கிள் வழங்கப்படாது அநீதி இழைக்கப்பட்டுள்ள வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு உடனடியாக மோட்டார் சைக்கிளை வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இத்தீர்மானம் காரைதீவு பிரதேச செயலகத்தில் நேற்று (13) இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் காரைதீவு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களினால் ஒப்பமிட்டு பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரும் சுகாதாரப் பிரதியமைச்சருமான பைஷால் காசீமிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.
நாட்டிலுள்ள ஏனைய 24 மாவட்டங்களில் கடமையாற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு கடந்த வரவு -செலவுத்திட்டத்தில் அமுல்படுத்தப்பட்ட தீர்வையற்ற மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும், அம்பாறை மாவட்டத்திலுள்ள வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது விடயத்தில் ஏகமனதான தீர்மானத்தை நிறைவேற்றுகின்றேன் என பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரும், சுகாதாரப் பிரதியமைச்சருமான பைஷால் காசீம் தெரிவித்தார்.
இத்தீர்மானத்தை உடனடியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, அம்பாறைஅரசாங்க அதிபர் துசித பி.வணிகசிங்க ஆகியோர்களுக்கு அனுப்பி வைக்குமாறு காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த்திடம் கேட்டுக்கொண்டார்.

