தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச சபையின் கீழுள்ள அமீர் அலி பொது நூலகத்தில் பாடசாலை மாணவர்களுடையிலான போட்டி நிகழ்வுகளும், மற்றும் வாசகர்களுக்கான விசேட தொழில்நுட்ப பயிற்சிகளும் இடம்பெறுவதாக சம்மாந்துறை அமீர் அலி பொது நூலகத்தின் நூலகர் ஐ.எல்.எம்.ஹனீபர் தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்களுடையிலான கட்டுரை, பேச்சு, சித்திரம் போன்ற போட்டிகள் இடம்பெறுவதுடன் சிரமதானம், வாசிப்பை வலியுறுத்தி துண்டுப் பிரசுரம், இலவசமாக நூலகத்திற்கு அங்கத்தவர்களை சேர்த்தல், வாசகர்களுக்கு இணையப் பாவனை தொடர்பான பயிற்சி, சிறுவர்களுக்கான காட்டூன் வீடியோக் காட்சிகள், நூலக நூல் பட்டியல் கணனி தரவு தளம் என்பன இடம்பெற்று வருவதாகவும், இம்மாதம் இறுதியல் போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு பரிசுப் பொதிகள், சான்றிதழ்கள் வழங்கும் விழா சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் ஏ.ஏ.சலீம் தலைமையில் அப்துல் மஜீட் மண்டபத்தில் நடைபெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சம்மாந்துறை பிரதேச சபையின் கீழுள்ள அனைத்து நூலகங்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள போட்டி நிகழ்வுகள் அனைத்தும் அமீர் அலி பொது நூலகத்திலே இடம்பெறும் எனவும் தெரிவித்தார்.
2004 ஆம் ஆண்டிலிருந்து ஒக்டோபர் மாதம் தேசிய வாசிப்பு மாதமாக அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 2016 ஆண்டு ஒக்டோபர் மாதாத்தில் வாசிப்பினை ஊக்குவிக்கும் பொருட்டு பல விசேட செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்துமாறு சகல பொது நூலகங்களினையும் அறிவுறுத்தியுள்ளதுடன், அதனை தேசிய நூலக ஆவணங்கள் சேவை நடைமுறைப்படுத்தியும் வருகின்றது. மக்களின் வாசிப்புப் பழக்கத்தை அபிவிருத்தி செய்தல், நூலக வளங்கள் மற்றும் சேவைகளை நவீனப்படுத்தல் போன்றன இதன் குறிக்கோளாக காணப்படுகின்றது.
