ஜனாதிபதி நாட்டுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்



பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு, குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு அரசியல் ரீதியான அழுத்தங்களை கொடுப்பது யார் என்பதை ஜனாதிபதி நாட்டுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வசந்த சமரசிங்க கேட்டுள்ளார்.
இந்த மூன்று நிறுவனங்களில் அரசியல் அழுத்தங்களின் அடிப்படையிலேயே விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதி கடந்த 11ஆம் திகதி தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பு நேற்று(13) நடத்திய ஊடக சந்திப்பிலேயே சமரசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் பலருக்கும் எதிராக முறைப்பாடுகளை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கூறுவது போன்ற அரசியல் அழுத்தங்கள் காரணமாக இவர்களுக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்படுவதில்லை என்பதை நாட்டுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.
ஜனாதிபதியின் கருத்துக்கு அடிப்படையாக அமைந்த அவன்கார்ட் ஊழல் கொடுக்கல் வாங்கலில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மூன்று முன்னாள் கடற்படை தளபதிகள், ஓய்வு பெற்ற பின்னர், அவன்கார்ட் நிறுவனத்தில் உயர் பதவிகளை வகித்த ஊழியர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிறுவனம் அரசுக்கு ஏற்படுத்தியுள்ள நஷ்டம் தொடர்பாக அவர்களை அழைத்து விசாரணை நடத்தி, அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தமை நியாயமானது.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இந்த ஊழலுக்கு ஆலோசனை வழங்கியதில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அவரை சட்டத்திற்கு முன் நிறுத்துவதில் தவறில்லை.
ஓய்வுபெற்ற ஜனாதிபதியின் பாரியார் ஷிராந்தி ராஜபக்சவிடம் விசாரணை நடத்தும் தேவை இருந்த போது, அதிகாரிகள் சபாநாயகரின் இல்லத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதுவும் அரசியல் அழுத்தம் காரணமாக நடந்தது.
இது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் ஏற்படுத்திக்கொண்ட உடன்பாட்டின் அடிப்படையின் பிரதிபலனே எனவும் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.