பிரிட்டனில் பிறந்த ஆலிவர் ஹார்ட் மற்றும் ஃபின்லாந்தைச் சேர்ந்த பெங்ட் ஹான் ஸ்டிரியம் ஆகியோர் ஒப்பந்தக் கோட்பாடு குறித்து ஆற்றிய பணிக்காக பொருளாதாரத் துறையில் நோபல் பரிசை வென்றுள்ளனர்.
இருவரும் அமெரிக்காவில் பணிபுரிகின்றனர்; பல துறைகளில் , கொள்கைகள் மற்றும் நிறுவனங்கள் வடிவமைப்புக்கு அறிவுபூர்வமான அடித்தளத்தை அவர்களின் பணி அமைத்துள்ளது என ஸ்வீடனின் ராயல் அகடமி ஆஃப் சயின்ஸ் தெரிவித்துள்ளது.
பணியாட்களுக்கு அவர்கள் செயல்பாடு அடிப்படையில் ஊதியம் வழங்குவது, மற்றும் பள்ளிகளை தனியார் மயமாக்க வேண்டுமா அல்லது அவை அரசிடம் இருக்க வேண்டுமா என்று பலதரப்பட்ட துறைகளில் ஆய்வு மேற்கொள்ள அவர்களின் பணி உதவியுள்ளது.
இன்று காலையில் 4.40 மணிக்கு தான் எழுந்ததாகவும் செய்தி கேட்டவுடன் முதல் வேலையாக தன் மனைவியை கட்டி அணைத்ததாகவும், தனது இளைய மகனை தூக்கத்திலிருந்து எழுப்பியதாகவும் நோபல் பரிசை வென்றிருக்கும் ஆலிவர் ஹார்ட், தெரிவித்துள்ளார்.
பரிசு பெற்றி்க்கும் இருவரும், சுமார் ஒரு மில்லியன் டாலர் பரிசுத் தொகையை பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.

