யாழ்.கொக்குவில் பகுதியில் நேற்று உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் இருவரினதும் மரணம் பற்றிய செய்திகள் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், இன்று குறித்த மாணவர்களின் மரணத்திற்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் எனக் கூறி யாழ் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து உயிரிழந்த மாணவர்களின் பிரேதபரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலையில் நடைபெறுவதால் வைத்தியசாலையின் வளாகத்தில் பதற்றமான நிலை காணப்படுகின்றது.
பல்கலைக்கழக கல்வியை புறக்கணித்த மாணவர்கள் வைத்தியசாலைக்கு படையெடுத்துள்ளதுடன், பிரேத அறைக்குள்ளும் அத்துமீறி நுழைந்துள்ளனர்.
இதனால் மாணவர்களை வெளியேற்றிகதவுகள் அடைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று பகல் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சென்றிருந்த மாவை சேனாதிராஜாவை பல்கலைக்கழக மாணவர்கள் சுற்றிவளைத்துள்ளதுடன், இது விபத்து அல்ல கொலை என்றும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எனினும் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த இளைஞர்களின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், குறித்த பகுதியிலிருந்து துப்பாக்கிச் சூட்டு சத்தம் கேட்டதாகவும், இவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் பிரதேச மக்கள் தெரிவித்ததுடன், மாணவர்களும் இது உண்மையாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

