உலகெங்கிலும் ஏராளமான இரசிகர்களை தனது அழகாலும் கவர்ச்சியாலும் கட்டிப்போட்ட பேரழகி மர்லின் மன்றோவின் ஆடை ஒன்று 4.8 மில்லியன் டொலருக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.
நடிப்பில் சிறந்து விளங்கிய ஹொலிவுட் நடிகைகள் பலருண்டு. ஆனால், அகில உலக கனவுக் கன்னியாகத் திகழ்ந்தவர் மர்லின் மன்றோ மட்டுமே.
பேரும் புகழும் பெற்றிருந்தாலும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை அவருக்கு நிம்மதியைத் தந்திருக்கவில்லை.
இளமையில் வறுமையை அனுபவித்த அவர், பல போராட்டங்களின் பின்னரே திரையுலகிற்குள் நுழைந்தார்.
வெளி உலகத்தில் மர்லின் மன்றோ பெரும் புகழ் பெற்றிருந்தாலும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை துயர் சூழ்ந்தது.
மர்லின் மன்றோ தனது தினசரி வாழ்க்கையில் மன அமைதிக்கும், செயற்திறனுக்கும் மாத்திரை மருந்துகளையே நம்பியிருந்தார். அதற்கு அடிமைப்பட்டுக்கிடந்தார்.
அக்காலப் பெரும் பணக்காரர்கள் கூட மன்றோவின் கண் பார்வைக்குக் காத்துக்கிடந்தும், அவரது திருமண வாழ்க்கை கண்ணாடித்துண்டுகள் போல உடைந்து சிதறியது.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான ஜோன் எஃப் கென்னடியுடன் மர்லின் மன்றோவுக்கு இரகசிய தொடர்பு இருப்பதாக பரபரப்பாகப் பேசப்பட்டது.
இந்நிலையில், கடந்த 1962 ஆம் ஆண்டு ஜனாதிபதியான ஜோன் எஃப் கென்னடியின் 45 ஆவது பிறந்தநாளில் பங்கேற்ற மர்லின் மன்றோ, ஒரு ஆடம்பரமான உடையை அணிந்திருந்தார்.
இதன்போது, மேடையில் ஏறி மர்லின் மன்றோ ‘Happy Birthday Mr. President’ என்ற வாழ்த்தை பாடலாகவே பாடி அசத்தினார்.
இந்நிகழ்வு நடைபெற்ற 3 மாதங்களுக்குப் பின்னர் அளவுக்கு அதிகமான போதை மருந்தை எடுத்துக்கொண்டதன் விளைவாக மர்லின் மன்றோ உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, 1963 ஆம் ஆண்டு ஜோன் எஃப் கென்னடி ஊர்வலம் ஒன்றில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஜோன் எஃப் கென்னடியின் பிறந்த நாள் நிகழ்ச்சியின்போது மர்லின் மன்றோ அணிந்திருந்த அந்த ஆடை தான் தற்போது ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது.
சுமார் 2,500 படிகங்கள் பதிக்கப்பட்ட அந்த ஆடையை Ripley’s Believe It or Not என்ற அருங்காட்சியகத்தின் உரிமையாளர் 4.8 மில்லியன் டொலருக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

