லங்கா ஈ நியுஸ் செய்தியாசிரியரை கைது செய்யுமாறு உத்தரவு



லங்கா ஈ நியுஸ் செய்தியாசிரியர் சந்தருவன் சேனாதீரவை சர்வதேச பொலிஸார் மூலம் உடனடியாக கைது செய்வதற்கு கம்பஹா பிரதான நீதவான் காவிந்தியா நாணயக்கார உத்தரவிட்டுள்ளார். 

நீதவான் இன்று இந்த உத்தரவை பிறப்பித்ததாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார். 

ரிவிர செய்தித்தாளின் முன்னாள் செய்தியாசிரியர் உபாலி தென்னகோனை தாக்கிய குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாள அணிவகுப்புக்கு நிறுத்துவதற்கு முன்பாக அவரின் புகைப்படத்தை லங்கா ஈ நியுஸ் இணையத்தளத்தில் வௌியிட்டமை தொடர்பாக சந்தருவன் சேனாதீர மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக அவருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அவர் இலங்கைக்கு வரும் பட்சத்தில் விமான நிலையத்திலேயே கைது செய்யுமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

லங்கா ஈ நியுஸ் இணையத்தளத்தின் ஊடாக நீதிமன்றத்திற்கும், நீதிபதிகளுக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தியமைக்கு எதிராக செய்தியாசிரியருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. 

அதேவேளை, லங்கா ஈ நியுஸின் ஊடாக இலங்கையில் சில நீதிபதிகளுக்கும், நீதிமன்றத்திற்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டமைக்காக சட்டத்தரணி மதுர வித்தானகேவினால் நேற்று 14 முறைப்பாடுகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன