(க.கிஷாந்தன்)
அட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட டிக்கோயா நுண்கலை கல்லூரிக்கு நல்லாட்சி அரசாங்கத்தினால் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் டிக்கோயா தமிழ் மகா வித்தியாலயத்தினை நுண்கலைக் கல்லூரியாக தரமுயர்த்தப்பட்டு நுவரெலியா மாவட்டத்திலே நுண்கலைக் கல்லூரியாக இப்பாடசாலை தெரிவுசெய்யப்பட்ட கட்டிட நிர்மாணப்பணிகளுக்காக 4 கோடியே 60 இலட்சம் ரூபா நிதியொதுக்கீடு செய்து கடந்த 3ந் திகதி நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
தோட்ட நிர்வாகம் தற்போது கட்டிட நிர்மாணப்பணிகளுக்காக வெட்டப்பட்ட காணி தோட்டத்திற்கு சொந்தமானது எனத் தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது.
இதனைத்தொடர்ந்து பாடசாலைக்கு காணியினை முறையாக பெற்றுக்கொள்ளும் வரை நிர்மாணப்பணிகளை இடைநிறுத்துமாறும் பிரச்சினை தீரும் வரை பாடசாலைக் காணியில் ஒருபகுதியில் நிர்மாணப்பணிகளை முன்னெடுக்குமாறும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது குறித்து முன்னாள் அதிபர் ஜே.ஏ.நிக்லஸ் அவர்களிடம் கேட்ட போது தெரிவுசெய்யப்பட்ட காணி பாடசாலைக்காணியாக தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதாக தெரிவித்தார்.
அட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட அதிகமான பாடசாலைகளில் முறையாக காணிகளை விடுவிக்கப்படாமையினால் நிர்மாணப்பணிகளின் போது பல்வேறு பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளதாக அரசியல் பிரமுகர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்பாடசாலையில் ஏற்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் மத்திய மாகாண அமைச்சர் எம்.ரமேஸ்வரன், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்னண் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதேவேளை டிக்கோயா தோட்டத்தில் பல ஏக்கர் காணிகள் காடாக மாறி வருவதும் பல இடங்களில் தனியார் காணிகளை ஆக்கிரமித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இது குறித்து உரிய நடவடிக்கை பொறுப்பு வாய்ந்தவர்கள் எடுக்காவிட்டால் இப்பாடசாலைக்கு ஒதுக்கப்பட்ட நிதி மீண்டும் திறைசேறியை சென்றுவிடுவதோடு அதனால் இப்பிரதேசத்தில் அமைதியற்ற சூழ்நிலை ஏற்படுமென பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

