(படுவான் பாலகன்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக சிலநாட்களாக பெய்து வருகின்ற மழைகாரணமாக மாவட்டத்தின் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல்வேறு பகுதியில் உள்ள தாழ்நிலங்களில் நீர்நிரப்பியுள்ளது. குறிப்பாக மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பண்டாரியாவெளி, படையாண்டவெளி ஆகிய கிராமங்களில் உள்ள வீடுகளுக்குள்ளும் நீர் புகுந்தள்ளதினால் ஒருசில குடும்பங்கள் தங்களது வீட்டில் இருந்து இடம்பெயர்ந்து உறவினர்களின் வீட்டிலும் தங்கியிருக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குறிப்பிட்டனர்.
மேலும் பிரதேசத்தின் மகிழடித்தீவு, அம்பிளாந்துறை, முதலைக்குடா, கடுக்காமுனை, கொக்கட்டிச்சோலை, பட்டிப்பளை, முனைக்காடு, அரசடித்தீவு ஆகிய கிராமங்களில் உள்ள வேளாண்மை வயல்களும் நீரால் மூழ்கியுள்ளதுடன் ஆற்றை அண்டிய பகுதியில் உள்ள வீடுகள் சிலவற்றிலும் நீர் புகுந்துள்ளது.
வெள்ள நீர்காரணமாக வீதிகள் சிலவும் நீரால் மூழ்கியுள்ளது. இதனால் போக்குவரத்து செய்யமுடியாத நிலையும் காணப்படுகின்றது. குறிப்பாக பிரதேசத்தின் மண்முனை வீதியில் இருந்து மகிழடித்தீவுக்கு செல்லுகின்ற கிறவல் வீதி, மகிழடித்தீவில் இருந்து படையாண்டவெளிக்கு செல்லுகின்ற வீதி, மற்றும் மண்முனை பாலத்தின் எழுவான்கரைப்பகுதியிலும் 50மீற்றர் தூரம் ஒரு அடி அளவிலான நீர் வீதியால் செல்லுகின்றமையால் மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கரவண்டியில் செல்லுகின்றவர்கள் வாகனங்களை உருண்டிச்செல்வதையும் காணமுடிந்தது.
தொடர்ச்சியாக மழை தொடருமாகவிருந்தால் பிரதேசத்தில் இருக்கின்ற பலவீதிகள் நீரால் மூழ்க கூடிய நிலையும், பண்டாரியாவெளி, படையாண்டவெளி மக்கள் குடியிருப்புகளுக்குள்ளும் ஏனைய ஆற்றை அண்டிய கிராம வீடுகளுக்குள்ளும் நீர் உட்புககூடிய அபாயம் உள்ளதாக அப்பிரதேசத்து மக்கள் குறிப்பிடுகின்றனர்.

