பாலமுரளி கிருஷ்ணா சென்னையில் காலமானார்



இசை வல்லுநருமான, டாக்டர் எம். பாலமுரளி கிருஷ்ணா சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 86.
கடந்த சில காலமாக அவர் உடல் நலம் குன்றியிருந்தார்.
கர்நாடக இசை பாடகராக மட்டுமின்றி, இசைக் கருவிகளை வாசிப்பதிலும், திரைப்படப் பின்னணிப் பாடல்கள் பாடுவதிலும் புகழ் பெற்றவர் பாலமுரளிகிருஷ்ணா. பல திரைப்படங்களுக்கு அவர் இசையமைத்திருக்கிறார்.
தென்னிந்தியாவின் மிகப் பிரபலமான கர்நாடக இசைக்கலைஞர்களில் ஒருவராக அறியப்படும் பாலமுரளிகிருஷ்ணா ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பிறந்தவர்.
தன் பெற்றோர்களிடம் இசை பயின்ற முரளிகிருஷ்ணா, பின்னர் முறையாக சங்கீதம் பயின்று தனது எட்டாவது வயதிலேயே பொது மேடையொன்றில் தனது முதல் கச்சேரியை நடத்தினார். அந்த கச்சேரியில் அவர் பாடல் திறனை மெச்சி, அவருக்கு ‘பால’ என்ற அடைமொழி வழங்கப்பட்டது.
அகில இந்திய வானொலியுடன் இணைந்து 60களில் பணியாற்றிய பாலமுரளிகிருஷ்ணா தனது பக்திப் பாடல்களுக்காக அப்போது பிரபலமாக அறியப்பட்டார். முதலில் விஜயவாடா , பின்னர் ஹைதராபாத் வானொலி நிலையங்களில் பணியாற்றிய பாலமுரளிகிருஷ்ணா, பின்னர் சென்னை அகில இந்திய வானொலியிலும் பணியாற்றி, சென்னையிலேயே குடி பெயர்ந்தார்.