சாதாரண தரப்பரீட்சை மாணவர்களிடமிருந்து கிடைத்த தே.அ.அ விண்ணப்பங்களில் குறைப்பாடுகள்



இந்த வருடம் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிடமிருந்து தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்கு கிடைத்த சுமார் 3000 விண்ணப்பங்களில் குறைப்பாடுகள் காணப்படுவதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறைப்பாடுகளை நிவர்த்தி செய்து முழுமைப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அனுப்பிவைக்கப்பட்ட சுமார் 700 விண்ணப்பங்கள் திணைக்களத்திற்கு திரும்ப கிடைத்துள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சரத் குமார குறிப்பிட்டுள்ளார்.

பிழையான முகவரி குறிப்பிடப்பட்டுள்ளமையாலேயே இந்த விண்ணப்பங்கள் ஆட்பதிவு திணைக்களத்திற்கு திரும்ப கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
முழுமையாக பூரணப்படுத்தப்படாத விண்ணப்பங்கள் , ஆவணங்கள் உரிய முறையில் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் , ஒன்றுக்கொன்று தொடர்பு படாத ஆவணங்கள் என்பன, குறித்த படிவங்களில் காணப்படுவதாகவும் ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த வருடம் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சரத் குமார சுட்டிக்காட்டியுள்ளார்.