(க.கிஷாந்தன்)
பெருந்தோட்ட பகுதிகளை கிராம மயமாக்குவதற்காக அமெரிக்காவிலும் உதவிகள் பெறப்படும். இதற்காக தமிழ் முற்போக்கு கூட்டணி அமெரிக்கா செல்லவிருப்பதாக மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
பத்தனை போகாவத்தை நகரில் அமைந்துள்ள கலாச்சார மண்டபத்தில் 03.12.2016 அன்று இடம்பெற்ற திடீர் மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில், அவர் இவ்வாறு தெரிவித்தார்.
போகாவத்தை, கெலிவத்தை, திம்புள்ள ஆகிய தோட்டப்பகுதிகளில் இதுவரை காலமும் இ.தொ.காவில் அங்கம் வகித்த அங்கத்தினர்கள் 300ற்கும் மேற்பட்டோர் தொழிலாளர் தேசிய சங்கத்தில் இணைந்துக் கொண்டனர்.
இவர்களை வரவேற்கும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,
பெருந்தோட்ட பகுதிகளை அபிவிருத்தி செய்யாமல் வைத்திருந்தால் அவர்களிடத்தில் தேர்தல் காலங்களில் வாக்குகளை பெற்றுக் கொண்டு அதனூடாக அமைச்சுகளையும் பெற்றுக்கொண்டு தொழிற்சங்கங்களையும் நடத்திக்கொள்ள வாய்ப்பாக அமையும் என்ற எண்ணப்பாட்டில் பலர் செயல்பட்டு வந்துள்ளனர்.
கிராம வாழ்க்கைக்கு இவர்களை அழைத்து சென்றால் இவ்வாறான சுபபோகங்கள் கிடைக்காது என்பது இவர்களின் நிலைப்பாடாக இருந்திருக்கின்றது.
ஆனால் நாங்கள் அவ்வாறாக இல்லை. அமைச்சர் என்ற ரீதியில் பெருந்தோட்டப் பகுதிகளிலிருந்து என்னை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதனால் அவர்களுடைய அருமை, பெருமை எனக்கு நன்கு தெரியும்.
ஆகையினால் தோட்ட வாழ்க்கையிலிருந்து கிராம வாழ்க்கைக்கு இவர்களை அழைத்துச் செல்லவே தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் எனது அமைச்சின் ஊடாக திட்டங்களை வகுத்து வருகின்றோம்.
கடந்த காலங்களில் 100 நாள் வேலைத்திட்டத்தின் போது அதிகமான வீடுகள் இ.தொ.கா அங்கத்தினர்களுக்கே வழங்கப்பட்டது. இந்தவகையில் எனது அமைச்சின் ஊடாக கட்டப்பட்டு வரும் வீடுகள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி பணிகளில் கட்சி பேதங்களோ இன வேறுபாடுகளோ அங்கு கிடையாது.
தோட்டங்களை இன்று கிராம மயமாக்கும் தனி வீட்டு அபிவிருத்தி திட்டங்களுக்கு தொழிலாளர்களின் ஒருமித்த ஆதரவு எமக்கு தேவைப்படுகின்றது. உங்களுடைய ஒத்துழைப்பும் உதவியும் கிடைக்கப்பெற்றால் 2020ம் ஆண்டில் எழுச்சி கிராமமாக தோட்டப்பகுதிகள் உருவாகிவிடும்.
இதனை மனதில் நிறத்தி தோட்டப்பகுதிகளை கிராம மயமாக்குவதற்கு அரசாங்கத்தின் உதவிகளுக்கு அப்பால் அமெரிக்காவின் உலக வங்கி உதவிகளையும் நாம் எதிர்பார்க்கின்றோம்.
எனவே எதிர்வரும் காலத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி அதன் உறுப்பினர்களுடன் அமெரிக்காவிற்கு பயணிக்க இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையில் மேல்பிரிவு மக்கள், கீழ்பிரிவு மக்கள், நடு கணக்கு என்ற கலாச்சாரங்களே காணப்பட்டது.
ஆனால் இன்று தோட்டப்பகுதிகளில் அமைக்கப்படும் தனி வீட்டு திட்டத்தினால் ஒவ்வொரு கிராமங்களுக்கும் மலையகத்தின் பிரபலம் வாய்ந்த பெரியோர்களின் பெயர்களை இட்டு கலாச்சார மாற்றத்தை கொண்டு வந்துள்ளோம் என்றார்.

