கல்முனை, கிண்ணியாவில் கடல், நிலப்பகுதியில்



கல்முனை மற்றும் கிண்ணியா ஆகிய பகுதிகளில் கடல் நீர் வழமைக்கு மாறாக இன்று நிலப்பகுதியை ஆக்கிரமித்தது.
கல்முனை பிரதேசத்தில் சுமார் 100 மீற்றர் தூரத்திற்கு கடல் நீர் உட்புகுந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
இவ்வாறு கடல் பெருக்கெடுப்பது சாதாரண விடயம் எனவும் இது தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை என அம்பாறை மாவட்ட இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்த்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, கடல் நீர் உட்புகுந்த பகுதிகள் மற்றும் கடலரிப்பு ஏற்பட்ட பகுதிகளை பாராளுமன்ற உறுப்பினர் க.கொடீஸ்வரன் இன்று பார்வையிட்டார்.
கடலரிப்பினால் திருக்கோயில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்திற்கு ஏற்படுகின்ற பாதிப்பை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் அவர் கூறினார்.
கடந்த நான்கு தினங்களாக திருக்கோயில் கபளீகரம் செய்தி தொகுப்பின் ஊடாக நியூஸ்பெஸ்ட் இந்த ஆலயத்தின் சிறப்பு மற்றும் தற்போது எழுந்துள்ள பிரச்சினை குறித்து சுட்டிக்காட்டியிருந்தது.
இதேவேளை,கிண்ணியா பிரதேசத்திலும் கடல் நீர் கிராமத்திற்குள் உட்புகுந்துள்ள காட்சிகள் எமது கமராவில் பதிவாகியது.
இது தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும், மீனவர்களுக்கு கடலுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் திருகோணமலை மாவட்ட இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.