அரசாங்கம் உரிய முறையில் பதிலளிக்காமையினால், ஏற்கனவே திட்டமிட்டபடி (19) நள்ளிரவு முதல் நாடு முழுவதுமுள்ள சகல தபால் நிலையங்களும் மூடப்பட்டு பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தபால் திணைக்கள ஊழியர்கள் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
கூட்டு தபால் தொழிற்சங்க ஊழியர்கள் முன்னணியின் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்க நடவடிக்கைக்குச் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு தொழிற்சங்கங்கள் முயற்சித்தன. இதற்காக கடந்த 17 ஆம் திகதி தபால் துறை அமைச்சர் எம்.எச்.அப்துல் ஹலீமுடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையில் உரிய பயன் கிடைக்காமையினால், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவது என தீர்மானிக்கப்பட்டதாகவும் சிந்தக பண்டார் அறிவித்துள்ளார்.
இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை நாளை மறுதினம் (21) நள்ளிரவு வரை 48 மணி நேரம் நீடிக்கும். இதன்போது, கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையம், நாடு முழுவதுமுள்ள தபால் காரியாலயம், உப தாபல் நிலையம் என்பவற்றின் ஊழியர்கள் கடமையில் ஈடுபட மாட்டார்கள்.
தபால் ரயில் போக்குவரத்து நடவடிக்கை, விமான தபால் போக்குவரத்து, பொது தபால் பெட்டிகளிலுள்ள கடிதங்கள் சேகரிப்பு என்பன முழுமையாக இடம்பெற மாட்டாது எனவும் சங்கங்கள் முன்னணி அறிவித்துள்ளது

