தமிழகத்தின் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து மர்மம் நிலவுவதாகவும், அவரது மரணம் தொடர்பான சந்தேகங்களைத் தெளிவுபடுத்த மாநில அரசு தவறிவிட்டதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தின் விடுமுறை கால அமர்வு கூறியுள்ளது.
ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதால், மூன்று உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகளை வைத்து ஆய்வுசெய்ய வேண்டுமெனக் கோரி தாக்கல்செய்யப்பட்ட பொது நல மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், வி.பார்த்திபன் அடங்கிய அமர்வு, ஜெயலலிதாவின் உடலைத் தோண்டியெடுத்து ஆய்வுசெய்ய உத்தரவிட வேண்டுமா என்று கேள்வியெழுப்பியுள்ளது.
இந்த வழக்கில் பிரதமர் அலுவலகம், மத்திய அரசு, தமிழக அரசு ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மரணம் குறித்து மத்திய அரசும் எந்தத் தகவலையும் வெளியிடாதது ஏன் என்றும் நீதிமன்றம் கேட்டுள்ளது.
"மத்திய அரசின் பிரதிநிதிகள் மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். என்ன நடந்தது என்பது தனக்குத் தெரியுமென மத்திய அரசின் வழக்கறிஞர் கூறுகிறார். ஆனால், இது தொடர்பான எந்தத் தகவலும் வெளியிடப்படாதது ஏன்" என நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

