வெளிநாடுகளிலும் இலங்கையிலும் இவ்வருடம் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் தேசத்துக்கும் வடக்கு மாகாணத்திற்கும் பெருமையும் புகழும் ஈட்டிக்கொடுத்த வடக்கு மாகாண விளையாட்டு வீர, வீராங்கனைகளைக் கௌரவிக்கும் வர்ண விருது விழா நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.
அனித்தா
இவ்வருடத்திற்கான வடக்கின் விளையாட்டுத்துறை நட்சத்திர விருது தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மாணவி அனித்தா ஜெகதீஸ்வரனுக்கு வழங்கப்படவுள்ளது.
இவ் வருடம் நடைபெற்ற 42ஆவது தேசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான கோலூன்றிப்பாய்தலில் 3.41 மீற்றர் உயரத்தைத் தாவி புதிய இலங்கை (தேசிய) சாதனையை நிலைநாட்டியதுடன் பல்வேறு மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கப் பதக்கங்கள் வென்றமைக்காக அனித்தாவுக்கு இந்த விருதை வழங்க வடக்கு மாகாண வர்ண விருது விழா ஏற்பாட்டுக் குழுவினர் ஏகமனதாகத் தீர்மானித்துள்ளனர்.
வடக்கு மாகாண விளையாட்டுத்துறை திணைக்களம், கல்வித் திணைக்களம் ஆகியன இணைந்து ஏழாவது தடவையாக ஏற்பாடு செய்துள்ள வடக்கு மாகாண விளையாட்டுத்துறை வர்ண விருது விழா சாவகச்சேரி நகரசபை பொன்விழா மண்டபத்தில் 21ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்ட நுவன் குமார (வெண்கலப் பதக்கம், தெற்காசிய விளையாட்டு விழா, மூன்று அம்ச விளையாட்டு), வி. ஆஷிகா (வெள்ளிப் பதக்கம், கனிஷ்ட பொதுநலவாய பளு தூக்கல்), கே. சபரிசனுஜா பி. கிருத்திகா, ஆர். பிரவிந்த் (மூவருக்கும் வெள்ளிப் பதக்கங்கள், ஆசிய கனிஷ்ட த்ரோ போல் வல்லவர் போட்டி), புத்திக இந்திரபால (வெண்கலப் பதக்கம், ஆசிய கடல்சூழ் பிராந்திய மெய்வல்லுநர் போட்டி), செபமாலைநாயகம் ஞானரூபன், எடிசன் பிகராடோ (இருவரும் பங்கேற்பு, பங்கபந்து தங்கக் கிண்ணம், தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனக் கிண்ணம்), எஸ். கொட்வின் (பங்கேற்பு, பங்கபந்து தங்கக் கிண்ணம், 23 வயதின் கீழ் ஆசிய கால்பந்தாட்ட கூட்டுசம்மேளனக் கிண்ணம்), கே. நவநீதன் (வெள்ளிப் பதக்கம், தி க்ரேட் ரிலே மலேசியா), கே. நெப்தலி ஜொய்சன் (புதிய சாதனையுடன் தங்கப் பதக்கம், அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா), ஜீ. டபிள்யூ. குமார (பங்கேற்பு, ஆசிய மற்றும் உலக கபடி போட்டிகள்). ஆகியோருக்கும் விசேட விருதுகள் வழங்கப்படவுள்ளன.
இதனைவிட கல்வி அமைச்சு, விளையாட்டுத்துறை சங்கங்கள் ஆகியன இவ் வருடம் நடத்திய போட்டிகளில் பங்குபற்றி பதக்கங்கள் வென்ற மற்றும் அடைவு மட்டத்தை எட்டிய வீர, வீராங்கனைகளுக்கு வர்ண விருதுகள் வழங்கப்படவுள்ளன.
வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் ஆர். ரவீந்திரனின் தலைமையில் நடைபெறும் இவ் விழாவில் 300 க்கும் மேற்பட்ட வடக்கு மாகாண விளையாட்டு வீர, வீராங்கனைகள் கௌரவிக்கப்படவுள்ளனர்.
தனி நபர் போட்டி நிகழ்ச்சிகள், அணி நிலை போட்டி நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் பிரகாசித்தவர்களுக்கு வர்ண விருதுகள் வழங்கப்படும். மாகாண கல்வி அமைச்சர் பி. குருகுலராஜா பிரதம அதிதியாக கலந்துகொண்டு பிரதான பரிசில்களை வழங்குவார்.

