நீதிமன்ற செயற்பாடுகளுக்கு இணையத்தளங்கள் ஊடாக விடுக்கப்படும் அழுத்தங்கள் தொடர்பில் சட்டநடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
வத்தளையில் இன்று நடைபெற்ற நீதிபதிகளின் வருடாந்த மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்த கருத்து…..
நீதிமன்றத் துறையில் செயற்படும் நீதிபதிகளுக்கு எதிராக இணைய ஊடகத்தின் மூலம் மிகவும் மோசமான விதத்தில் விமர்சனங்கள் தெரிவிக்கப்படுவதுடன், பொய்யான பிராசாரங்களும் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக இணையத்தளம் ஊடாக எமது நாட்டில் அதிகளவில் நானே விமர்சிக்கப்படுகின்றேன். அந்த சாதனையை யராலும் முறியடிக்க முடியாது. எனினும் நான் அதனை பார்ப்பதில்லை. இணையத்தளங்களை பார்க்கவேண்டாம் என நான் எனது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் கூறியுள்ளேன். வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை இணையத்தளங்கள் மூலம் தவறாக பயன்படுத்துகின்றனர். மிகவும்மோசமான விதத்தில் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கப்படுகின்றது. அரசாங்கம் என்றவகையில் நாம் இதுகுறித்து கவலையடைகின்றோம்.
நான் இதுகுறித்து நீதி அமைச்சுடன் கலந்துரையாடி சட்டநடவடிக்கை எடுப்பதற்காக செயற்படவுள்ளேன்.
மேலும் நீதிமன்ற துறையிலுள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் நியாயமான சம்பள முறைமை ஒன்றை தயாரிப்பதாகவும் ஜனாதிபதி இங்கு உறுதிவழங்கினார்.

