சிறைச்சாலை வைத்தியர்கள் சிலர் இலஞ்சம் பெறுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் குழு



சிறைத்தண்டனை விதிக்கப்படும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல்வேறு நபர்களிடம் சிறைச்சாலை வைத்தியசாலையின் சில வைத்தியர்கள் இலஞ்சம் பெற்று, வைத்தியசாலையில் அனுமதிப்பதாக முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுகள் குறித்து ஆராய்வதற்காக சுயாதீன குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சு கூறியுள்ளது.
முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுயாதீன குழுவின் ஊடாக எதிர்காலத்தில் விரிவான விசாரணைகளை மேற்கொள்வதாக அமைச்சின் பதில் செயலாளர் டபிள்யூ.ஏ.எஸ்.பி. அமரதுங்க குறிப்பிட்டார்.
சிறைச்சாலை வைத்தியசாலையிலுள்ள சில வைத்தியர்கள் இலஞ்சம் பெறுவதாக எழுகின்ற குற்றச்சாட்டுகள் குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித மஹீபாலவுடன் கலந்துரையாட திட்டமிட்டுள்ளதாகவும் பதில் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
இந்த விடயம் குறித்து சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான துஷார உபுல்தெனியவிடம் நாம் வினவினோம்.
சுகாதார அமைச்சின் ஊடாகவே சிறைச்சாலை வைத்தியசாலை நிர்வகிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
இதன் காரணமாக அந்த விடயங்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.