ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் இன்று வெள்ளிக்கிழமை பதவி விலகியுள்ளார். மு.காங்கிரசின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலிக்கு, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்கும் பொருட்டே, சல்மான் பதவி விலகியுள்ளார் என தெரிய வருகிறது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சியின் செயலாளர் பதவி தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக மு.கா. தலைவர் ஹக்கீமுக்கும் – செயலாளர் நாயகம் ஹசன் அலிக்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றிருந்த பேச்சுவார்த்தையின் போது ஹசன் அலிக்கு உடனடியாக தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவதாகவும் , ஒரு மாத காலத்துக்குள் கட்சியின் பேராளர் மாநாட்டினைக் கூட்டி முழு அதிகாரம் கொண்ட செயலாளர் பதவியினை வழங்குவதாகவும் ஹக்கீம் உறுதியளித்திருந்தார் எனவும்இதனடிப்படையிலேயே சல்மான் பதவி விலகியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்றையதினம் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரை, மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம், செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலி மற்றும் உயர்பீட செயலாளர் மன்சூர் ஏ. காதர் ஆகியோர் சந்தித்திருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

