புத்தாக்க போட்டியின் தேசிய மட்ட வௌ்ளிப் பதக்கம்




இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கத்தினால் நடத்தப்பட்ட அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான புத்தாக்க போட்டியின் தேசிய மட்டத்தில் மட்டக்களப்பு - கல்குடா கல்வி வலயத்தைச் சேர்ந்த செங்கலடி விவேகானந்தா வித்தியாலயத்தில் தரம் 06 இல் கல்வி கற்கும் மாணவி செல்வி.புவனேசராசா நகுமி வெள்ளி பதக்கத்தை பெற்றுக் கொண்டார். 

செல்வி.புவனேசராசா நகுமியினால் தயாரிக்கப்பட்ட - மாவிடிக்கும் இயந்திரத்திற்கே வெள்ளி பதக்கத்தை பெற்றுக் கொண்டுள்ளார். 

கொழும்பு பல்கலைக் கழகத்தில்; நடைபெற்ற இறுதிப் போட்டியிலேயே நகுமி இரண்டாமிடத்தினைப் பெற்றுக் கொண்டார். 

பாடசாலை ரீதியாக விண்ணப்பித்ததன் அடிப்படையில் தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவான செல்வி.புவனேசராசா நகுமி இறுதிப் போட்டியில் இந்த வெற்றியைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

வெள்ளிப் பதக்கத்தைப் பெற்ற மாணவியை வித்தியாலய அதிபர் க.சிவலிங்கராஜா வாழ்த்தியதோடு, அம்மாணவியை தயார்படுத்திய தயாமதி பிரேம்குமார் ஆசிரியருக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். 

அத்துடன் கடந்த வருடம் நடைபெற்ற புத்தாக்க போட்டியிலும் இப்பாடசாலை தரம் 9ல் மாணவன் ஜீவரெத்தினம் பிரதீபன் நீரூற்றும் இயந்திரக் கண்டுபிடிப்புக்காக தேசிய மட்டத்தில் 5ம் இடத்தைப் பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.