தென்னாபிரிக்காவிற்கு எதிரான முதலாவது சர்வதேச இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 19 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
செஞ்சூரியனில் நடைபெற்ற இந்தப்போட்டி மழையின் குறுக்கீடு காரணமாக 10 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்காவின் முதல் இரண்டு விக்கெட்டுக்களும் 30 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன.
ஹெய்னோ குன் 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, ஜே.ஜே ஸ்மட்ஸ் 13 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
எனினும், அபாரமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் மில்லர் 18 பந்துகளில் 40 ஓட்டங்களைப் பெற்று தென்னாபிரிக்காவை வலுப்படுத்தினார்.
தென்னாபிரிக்கா 10 ஓவர்களில் 05 விக்கெட் இழப்புக்கு 126 ஓட்டங்களைப் பெற்றது.
பந்துவீச்சில் நுவன் குலசேகர 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
127 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலளித்தாடிய இலங்கை அணி சார்பாக நிரோஷன் டிக்வெல்ல நம்பிக்கை அளிக்கும் விதத்தில் துடுப்பெடுத்தாடினார்
19 பந்துகளை எதிர்கொண்ட் அவர் 43 ஓட்டங்களை விளாசினார்.
எனினும், நிரோஷன் டிக்வெல்லவின் ஆட்டமிழப்பை அடுத்து இலங்கை அணி தடுமாற்றத்தினை சந்தித்தது.
03 வீரர்கள் 10 க்கும் குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
இலங்கை அணி 10 ஓவர்களில் 06 விக்கெட் இழப்புக்கு 107 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.
இந்த வெற்றியின் மூலம் 03 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு இருபது தொடரில் தென்னாபிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.

