ஹம்பாந்தோட்டையில் கலகம் விளைவித்தோர் விளக்க மறியலில்



ஹம்பாந்தோட்டை பகுதியில் கலகத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் 23 பேர் விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். 

நீதிமன்ற ஆணையை மீறி குழப்பத்தை ஏற்படுத்தியமை மற்றும் பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன. 

அவர்களில் 21 பேரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரையிலும், 2 பேரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரையிலும் தடுத்துவைக்குமாறு ஹம்பாந்தோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஏற்கனவே, முறுகல் நிலை காரணமாக 52 பேர் இன்று (7) கைது செய்யப்பட்டனர். 

ஹம்பாந்தோட்டையில் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் காரணமாக பொது சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அவர்கள் கைதாகினர். 

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது 3 பொலிஸார் உட்பட 21 பேர் காயமடைந்தனர். 

தனியார் காணிகளை சீனாவிற்கு பகிர்ந்தளிக்கும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. 

ஆர்ப்பாட்டம் மேற்கொண்டவர்கள் மீது கலகம் அடக்கும் பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர் பீச்சு பிரயோகங்களை மேற்கொண்டிருந்தனர். 

இந்தநிலையில், ஹம்பாந்தோட்டை தொழில்துறை வலயத்தில் இடம்பெற்ற திறப்புவிழாவொன்றில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.