உலகவாழ் தமிழ் மக்கள் தொன்றுதொட்டு மேற்கொண்டுவரும் சூரிய வழிபாட்டின் மிகச்சிறந்த வழிபாடாகவே தைப்பொங்கல் கொண்டாடப்பட்டு வருவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியில் ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான உணர்வுப்பூர்வமான உறவிற்கு நன்றி செலுத்தும் நிகழ்வான இந்த தினம், மக்களின் ஆன்மீக வாழ்க்கைக்கு நற்சிந்தனைகளை ஒன்று சேர்க்கும் நாளாகத் திகழ்வதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உழவுத்தொழிலும் உலகமும் உயிர் வாழ மழையைத் தரும் சூரியன் உள்ளிட்ட இயற்கைச் சூழல் மீதும், கமத்திற்கு கைகொடுத்து, பசிக்குப் பால் கொடுக்கும் கால்நடைகள் மீதும் மனமார்ந்த பக்தி மற்றும் கௌரவத்தை வெளிப்படுத்துவது அந்த மக்களின் செய்நன்றி மறவாப் பண்பை எடுத்துக்காட்டுவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
மனிதனுக்கும் இயங்கையின் கொடைகளுக்கும் இடையிலான பரபஸ்பர உடன்படிக்கையைப் புதுப்பிக்கும் இவ்வாறான கலாசார பண்டிகைகள் மானிட சமூகத்தின் உயர்ந்த பண்புகளை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பேண்தகு யுகத்தை நோக்கிய புதிய பாதையில் அடியெடுத்து வைக்கும் இந்த சந்தர்ப்பத்தில் தைத்திருநாள் தொன்றுதொட்டு கொண்டுவரும் இந்த வாழ்த்துச் செய்தியானது அதனை மேலும் மெருகூட்டுவதாக அமையும் என்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விடுத்துள்ள தைப்பொங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

