தமிழக சட்டமன்ற குழுத் தலைவராக நேற்றைய தினம் (ஞாயிறு) அ.தி.மு.கவின் பொது செயலாளாரான சசிகலா நடராஜன் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், தமிழகத்தை சேர்ந்த பல பிரபலங்களும் தங்களுடைய அதிருப்தியை நேரடியாகவும், மறைமுகமாகவும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
காமராஜர் மற்றும் அண்ணா அமர்ந்த நற்காலி
தங்களுடைய தலைவரை தேர்வு செய்யும் உரிமை அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இருப்பதைப்போல், அவர் முதல்வர் பதவிக்கு தகுதியானவர் தானா என்பதை கேள்வி கேட்கும் உரிமை பொதுமக்களுக்கு இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், காமராஜர் மற்று அண்ணா போன்றோர் அமர்ந்த முதல்வர் நாற்காலியை பெருமையுடன் திரும்பிப்பார்ப்பதாகவும், அ.தி.மு.க மற்றும் தமிழகத்தில் உள்ள மக்கள் எதிர்திசையில் பயணிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின் என்ற குறளை மட்டும் கமல் ஹாசன் ட்விட்டரில் பதிந்துள்ளார். வலியறிதல் என்ற அதிகாரத்தில் வருகிறது இக்குறள்.
மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும் என்பது குறள் விளக்கம்.
ஜெயலலிதாவின் எண்ணத்திற்கு விரோதமான சம்பவம்
மக்களுடைய விருப்பத்திற்கு எதிராகவும், அதேபோல அம்மையார் ஜெயலலிதாவின் எண்ணத்திற்கு விரோதமாகவும் ஒரு சம்பவம் இன்றைக்கு அரங்கேறி இருக்கின்றது என்ற தி.மு.கவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பேரழிவிற்கு பின்பே புதிய அத்தியாயம்
ஒவ்வொரு பேரழிவிற்கு பின்பே புதிய அத்தியாயம் பிறக்கிறது என்று தமிழ் திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
234 வேலை வாய்ப்புகள்
தமிழகத்தில் உள்ள எல்லா இளைஞர்களுக்கும், 234 வேலைவாய்ப்புகள் கூடிய விரைவில் திறக்கப்பட உள்ளது என்று கிரிக்கெட் நட்சத்திரமான அஷ்வின் ட்வீட் ஒன்றை தட்டினார். அது மிகவும் அதிகமாக பகிரப்பட்ட நிலையில், இரண்டு மணி நேரம் கழித்து அந்த ட்வீட் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டத்திற்காக போடப்பட்டது என்று விளக்கம் அளித்தார் அவர்.
வேட்பாளர் தகுதியின் அவசியத்தை புரிந்து கொள்ளுங்கள்
பன்னீர் செல்வமாக இருப்பதற்கு ஒரு தனி மனநிலை வேண்டும் என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதிமணி, இந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சுயமாக, தமிழக நலனுக்காக சிந்திப்பார்கள் என்றா மக்கள் வாக்களித்தார்கள் வேறென்ன எதிர்பார்க்க முடியும் என்றும், அதிமுகவின் ஜனநாயகமற்ற, சுயமரியாதையற்ற சர்வாதிகார செயல்பாடுகளை ஜெ., இருந்தபோது கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொண்டதன் விளைவு இது என்றும் கூறியுள்ளார்.
மேலும், நமது தொகுதியின் வேட்பாளர் தகுதியைப் பற்றி கவலைப்படாமல் ஒற்றைத் தலைவருக்காக வாக்களிப்பதன் அபத்தத்தை இப்பொழுதாவது நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
முழுமையான பேரழிவு
இது ஒரு முழுமையான பேரழிவு என்றும், நம்மை அழிவு எதிர்நோக்குகிறது என்று அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம்
சசிகலா முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டது தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தன் அதிருப்தியை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலும், சசிகலா படத்தை கிழித்தவரை அடித்து உதைத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பழைய தொழில் மறந்து விடக் கூடாது என பயிற்சி எடுத்திருப்பார் என்றும் கிண்டல் செய்து பதிவு போட்டுள்ளார்.

