இலங்கைக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையில் நேற்று (10) செஞ்சுரியனில் இடம்பெற்ற போட்டியில் தென்னாபிரிக்க அணி 88 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
இதன் மூலம் 5 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 5 - 0 என வைட் வொஷ் (White Wash) முறையில் தனதாக்கிக் கொண்டதோடு, அதன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட் அணி தரப்படுத்தலில் ஒரு புள்ளியை பெற்று அவுஸ்திரேலிய அணியை பின்தள்ளி முதலாவது இடத்தை நோக்கி முன்னேறியுள்ளது.
நேற்றைய போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி இலங்கை அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. அதன் அடிப்படையில் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி
தென்னாபிரிக்கா 384/6
ஹசிம் அம்லா 154
குயின்டன் டி கொக் 109
டு பிளசிஸ் 41
சுரங்க லக்மால் 3/71
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள், சரியான தொடக்கத்தை வழங்க முடியாது தடுமாறினர். ஒரு கட்டத்தில் 5 விக்கெட்டுகளை இழந்து 82 ஓட்டங்களை (82/5) பெற்றிருந்த இலங்கை அணிக்கு, ஆறுதலளிக்கும் வகையில் நடுவரிசை வீரர்களான அசேல குணரத்ன, சச்சித் பத்திரண ஆகியோர் சிறப்பாக துடுப்பெடுத்தாடினர்.
ஆயினும் வெற்றி இலக்கை அடைய முடியாத இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 296 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை 296/8
அசேல குணரத்ன 114*
சச்சித் பத்திரண 56
கிறிஸ் மொரிஸ் 4/31
அந்த வகையில் போட்டியின் நாயகனாக 154 ஓட்டங்களைப் பெற்ற ஹசிம் அம்லா தெரிவு செய்யப்பட்டதோடு, போட்டித் தொடரின் நாயகனாக, தொடரில் 410 ஓட்டங்களைப் பெற்ற பப் டு பிளசிஸ் தெரிவு செய்யப்பட்டார்.
அதன் அடிப்படையில் தென்னாபிரிக்க சென்ற இலங்கை அணி, 3 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரை 3 - 0 எனவும், 5 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரை 5 - 0 எனவும் தோல்வி கண்டுள்ளதோடு, ஆறுதலளிக்கும் வகையில் 3 போட்டிகளைக் கொண்ட ரி20 போட்டித் தொடரை 2 - 1 என வெற்றி கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

