கிழக்கு மாகாணத்திலுள்ள கிரிக்கட் வீரர்களின் திறமைகளை மேம்படுத்தும் பொருட்டு மட்டக்களப்பில் அனைத்து வசதிகளையும் கொண்ட கிரிக்கட் பயிற்சி நிலையம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைத் தலைவரும் பிரதி சபாநாயகருமான திலங்க சுமதிபால தெரிவித்தார்.
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (10) இரவு அம்பாறை மாவட்ட கரையோர பிராந்திய கிரிக்கட் விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் வேண்டுகோளின் பேரில் திலங்க சுமதிபால கல்முனைக்கு விஜயம் செய்து, இந்த கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்.
இதில் அம்பாறை மாவட்ட கரையோர பிராந்தியத்தை சேர்ந்த 48 கிரிக்கட் கழகங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதன்போது வன் பந்து கிரிக்கட் வீரர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களது தேவைகள் குறித்து திலங்க சுமதிபாலவிடம் எடுத்துரைக்கப்பட்டதுடன் அம்பாறை மாவட்டத்தில் கரையோர பிராந்தியத்திற்கென பிரத்தியேகமாக கிரிக்கட் சபை ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
இவற்றை செவிமடுத்த கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபைத் தலைவர் திலங்க சுமதிபால பதிலளித்து உறையாற்றுகையில்;, இங்கு முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள், கோரிக்கைகள் தொடர்பில், தான் சாதகமாக பரிசீலித்து, முடியுமான நடவடிக்கைகளை எடுத்து, இப்பிரதேசத்தில் கிரிக்கெட் விளையாட்டு முன்னேற்றம் அடைவதற்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவேன்.
பொதுவாக பாடசாலை மற்றும் கழக மட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள் எம்மால் வகுக்கப்பட்டுள்ளன.
அவற்றை நடைமுறைப்படுத்தும்போது இங்கு சொல்லப்பட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும். அதேவேளை கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களினதும் மத்திய இடமான மட்டக்களப்பில் கிரிக்கட் பயிற்சி நிலையத்தை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது´ என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கழகங்களின் பிரதிநிதிகளினால் திலங்க சுமதிபால, நினைவுச் சின்னம் வழங்கப்பட்டு, பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

