இறுக்கமான சுற்றறிக்கையை தவிர்க்கவும்



தொண்டர் ஆசிரியர்களின் நிரந்தர நியமனத்திற்கான கல்வித் தகைமைகள் தொடர்பில் இறுக்கமான சுற்றறிக்கையை வெளியிடாமல், கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து தொண்டர் ஆசிரியர்களுக்கும் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அம்பாறை மாவட்ட சுயாதீன தொண்டர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் எம்.பௌசர், கிழக்கு மாகாண ஆளுநர், முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இன்று வியாழக்கிழமை சாய்ந்தமருதில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; 

"கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு, கடந்த இருபது வருட காலமாக மிகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்ற எமது தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் கடந்த ஆட்சிக் காலத்தில் கிடப்பில் போடப்பட்டிருந்தது. 

எனினும் இந்த நல்லாட்சியில் எமது தொண்டர் ஆசிரியர்களின் இருண்ட வாழ்வுக்கு விடிவு காலம் பிறந்துள்ளது. இந்த அரசாங்கம் பதவிக்கு வந்தது தொடக்கம் இவர்களுக்கு நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இதற்கான அமைச்சரவை அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் போட்டிப்பரீட்சை நடத்துவதையோ அதிகபட்ச கல்வித் தகைமைகளை கோருவதையோ விடுத்து, கிழக்கில் பணியாற்றுகின்ற 445 தொண்டர் ஆசிரியர்களுக்கும் நியமனம் கிடைப்பதை கிழக்கு மாகாண சபை உறுதி செய்ய வேண்டும் எனவும் அதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றோம். 

அதேவேளை எமது நீண்ட கால, தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து, உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமைக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கல்வி அமைச்சர் அகிலாவிராஜ் காரியவசம் ஆகியோருக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவிக்கும் தீர்மானங்களை எமது தொண்டர் ஆசிரியர் சங்கம் நிறைவேற்றியுள்ளது என்றார்.