கல்முனை வலய ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்



கல்முனை கல்வி வலயத்தை சேர்ந்த ஆசிரியர்களின் சம்பள நிலுவை இழுத்தடிக்கப்படுவதை கண்டித்து நாளை புதன்கிழமை இலங்கை மகா ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட இருப்பதாக அந்த சங்கத்தின் தலைவர் ஏ.எம். அஹுவர் தெரிவித்தார். 

இப்போராட்டம் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்திற்கு முன்பாக நாளை பிற்பகல் 3.௦௦ மணி தொடக்கம் 4.௦௦ மணி வரை நடைபெறும் எனவும் அனைத்து ஆசிரியர்களையும் இப்போராட்டத்தில் பங்கேற்குமாறு துண்டுப்பிரசுரம் மூலம் சங்கத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

கல்முனை வலயப் பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களில் சுமார் 1200 ஆசிரியர்களுக்கு இன்னும் சம்பள நிலுவை வழங்கப்படாததால் அவர்கள் மிகுந்த கஷ்டத்தில் இருந்து வருகின்றனர். வலயக் கல்வி அதிகாரிகளின் அசமந்தப்போக்கே இதற்கு காரணம் என எம்மிடம் சுட்டிக்காட்டப்படுகிறது. 

இது விடயமாக வலயக் கல்விப் பணிப்பாளர் தொடக்கம் மாகாண ஆளுநர் வரை பல்வேறு உயர் அதிகாரிகளிடம் எமது கோரிக்கையை வலியுறுத்தி, பல்வேறு முயற்சிகளை எமது சங்கம் மேற்கொண்டுள்ள போதிலும் இன்னும் அதனை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரியவில்லை. 

அதேவேளை நடப்பு வருடத்தின் சம்பள நிலுவைகள் வழங்கப்பட மாட்டாது என மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஊடகங்களில் தெரிவித்துள்ளார். இதனால்தான் நாம் போராட்டத்தில் குதிக்க நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.