முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாப்புத் தரப்பிற்கு பணிப்புரை விடுத்துள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார்.
கேப்பாப்பிலவு உட்பட முல்லைத்தீவு பிரதேசத்தில் மக்களின் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகள் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய இராணுவத் தளபதியின் ஆலோசனையுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் கூறினார்.
எனினும், தமது காணிகள் கிடைக்கும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மக்கள் குறிப்பிட்டனர்.
கேப்பாப்பிலவு- பிலக்குடியிருப்பு பகுதியில் விமானப்படையினரின் முகாம் அமைந்துள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த 15 நாட்களாக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வடக்கு, கிழக்கு பகுதிகளில் பல்வேறு தரப்பினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

