மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் சத்தியாக்கிரகம்.




மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்றிருக்கும் சுமார் 1500 இற்கு மேற்பட்ட பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கக் கோரி தாங்கள் செவ்வாய்க்கிழமை (21.02.2017) தொடக்கம் காலவரையறையற்ற சத்தியாக்கிரகத்திற்கு ஏற்பாடுகள் செய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத் தலைவர் ரீ. கிஷாந்த் தெரிவித்தார்.

மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி தொடக்கம் பின்வரும் கோரிக்கைகளை தாம் முன்னிலைப்படுத்தியே இந்த காலவரையறையற்ற சத்தியாக்கிரகத்தைத் தொடங்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.



கடந்த 2012.03.31 ஆம் திகதிக்குப் பின்னர் தற்போது வரை பட்டாரிகளாக வெளியேறியுள்ள சுமார் 1500 மேற்பட்டோர் வேலையற்றிருக்கின்றார்கள் என்று தெரிவித்த  கிஷாந்த் அவர்களில் சுமார் 70 பேர் 35 வயதைக் கடந்தவர்கள் என்றும் தெரிவித்தார்.


பட்டதாரிகளின் திறமைகளை ஒரு குறிப்பிட்ட போட்டிப் பரீட்சைகளின் மூலம் அறிந்து கொள்ள முடியாது என்பதைக் கருத்திற்கொண்டு
நேர்முகப் பரீட்சையின் மூலம் பட்டதாரிகளுக்கான நியமனங்களைப் பயிற்சியின் அடிப்படையிலேனும் வழங்க  வேண்டும்
இதற்குரிய நிதி மற்றும் ஏற்பாடுகளை மத்திய அரசு மாகாண சபைகளுக்கு செய்து கொடுக்க வேண்டும்.

பட்டதாரி நியமனங்கள் அவர்கள் பட்டம் பெற்ற ஆண்டின் அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதுடன், பட்டதாரிகள் வேலை வாய்புப் பெறுவதற்கான வயதெல்லையை 45 ஆக நிர்ணயிக்க வேண்டும்.
பட்டதாரி நியமனங்களுக்கு விண்ணப்பம் கோரப்படும்போது ஏற்கெனவே அரச சேவையில் உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியாதவாறு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.


கோட்டா முறையில் நியமனம் வழங்கும் ஏற்பாடுகள் முற்றிலுமாகத் தடை செய்யப்பட வேண்டும்.