கிண்ணியா பாடசாலைகள் மீள ஆரம்பம்



திருகோணமலையில் தீவிரமடைந்த டெங்கு காய்ச்சலால் விடுமுறை வழங்கப்பட்ட கிண்ணியா வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகள் நாளை (20) மீள திறக்கப்படவுள்ளன.
அதற்கமைய 66 பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் வழமைப் போல நாளை (20) முன்னெடுக்கப்படும் என கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கிண்ணியா கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் டெங்கு பரவாமல் இருப்பதற்கான உத்தரவாதத்தை பிராந்தியத்திற்கு பொறுப்பான சுகாதார சேவை உத்தியோகஸ்தர்கள் பொறுப்பெடுத்துள்ளனர்.
கிண்ணியாவில் மாத்திரம் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 09 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 1000 இற்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதோடு பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் அவர்களில் உள்ளடங்கியுள்ளனர்.
இதன் காரணமாக கடந்தவாரம் கிண்ணியா வலயத்திற்கு உட்பட்ட 66 பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டது.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வருடத்தை விட இந்தவருடம் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் வீதம் அதிகரித்துள்ளது.
அதற்கமைய மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இந்த வருடம் இதுவரையில் 1162 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் இப்ராஹீம் லெப்பை குறிப்பிட்டுள்ளார்.
அவர்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை கிழக்கு மாகாணத்தில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 பேரும் திருகோணமலையில் 14 பேரும் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.