வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் அரசாங்கம் மற்றும் கிழக்கு மாகாணசபை எதுவித நடவடிக்கையும் எடுக்காமை தொடர்பில் பெரும் கவலையளிப்பதாக சர்வமத ஒன்றியத்தின் தலைவரும் மட்டக்களப்பு-அம்பாறை மறை மாவட்ட ஆயருமான அருட்கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை தெரிவித்தார்.
இதேபோன்று அரசாங்கம் புறக்கணிக்குமானால் அனைத்து பெண்கள் அமைப்புகளையும் ஒன்றுதிரட்டி அவர்களுக்கு சார்பாக போராட்டங்களை நடாத்த வேண்டிய நிலையேற்படும் என மட்டக்களப்பு மாவட்ட மகளிர் சம்மேளனத்தின் தலைவி திருமதி செல்வி மனோகர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக 29 வது நாளாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இரண்டாவது தடவையாகவும் மட்டக்களப்பு மாவட்ட சர்வமத ஒன்றியம் ஆதரவு தெரிவித்து இன்று செவ்வாய்க்கிழமை கலந்துகொண்டது.
இதன்போது இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதத் தலைவர்களும் கலந்துகொண்டதுடன் அகில இலங்கை வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் இணைப்பாளரும் கலந்துகொண்டார்.
இதேவேளை வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் போராட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து இன்றைய போராட்டத்தில் கலந்துகொண்டன.
அதிளவில் பெண்கள் வீதிகளில் போராடிவருவதை பார்க்கும்போது கவலையளிப்பதாகவும், தொடர்ந்து இந்த போராட்டத்தினை அரசாங்கம் புறக்கணிக்குமானால் அனைத்து பெண்கள் அமைப்புகளையும் ஒன்றுதிரட்டி அவர்களுக்கு சார்பாக போராட்டங்களை நடாத்தவேண்டிய நிலையேற்படும் என மட்டக்களப்பு மாவட்ட மகளிர் சம்மேளனத்தின் தலைவி திருமதி செல்வி மனோகர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான வேலையற்ற பட்டதாரிகளாக பெண்கள் காணப்படுவதாகவும் அவர்கள் தங்களது கைக்குழந்தைகளுடன் வீதியில் 29நாளாக போராடிவருவதை அரசாங்கம் உதாசீனம் செய்துவருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இதேநேரம் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் நாளை புதன்கிழமை ஒரு மாதத்தினை பூர்த்திசெய்யவுள்ள நிலையில், அன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதிகள் அனைவரையும் காந்தி பூங்கா வருகைதருமாறு மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

