சிறிமாவோவின் பின்னர் ஜனாதிபதி ரஷ்யாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம்:



ரஷ்ய அரசாங்கத்தின் அழைப்பிற்கு அமைய, மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை ரஷ்யா நோக்கி பயணமாகவுள்ளார்.
1991 ஆம் ஆண்டு ஐக்கிய சோவியத் சோசலிசக் குடியரசு கவிழ்க்கப்பட்டதன் பின்னர், உருவாக்கப்பட்ட ரஷ்யா பொருளாதார ரீதியில் தற்போது பலம்வாய்ந்த நாடாகக் காணப்படுகிறது.
மசகு எண்ணெய் மற்றும் இயற்கை வாயு உற்பத்தியின் மூலம் ரஷ்யா பாரிய வருமானத்தை ஈட்டுகின்றது.
பலம் வாய்ந்த இந்த நாட்டிற்கு விளாடிமிர் புட்டின் தற்போது தலைமை வகிக்கின்றார்.
இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான உறவுகள் ஐக்கிய சோவியத் சோசலிசக் குடியரசு காலத்தில் இருந்து தொடர்கின்றது.
இரண்டாவது உலக யுத்தத்தின் பின்னர் 1990 ஆம் ஆண்டு முதற்பகுதி வரை இடம்பெற்ற பனிப்போர் வரைக்கும் இலங்கை அணிசேரா கொள்கைகளைப் பின்பற்றியதுடன், எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க மற்றும் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் ரஷ்யா அடங்கிய சோவியத் குடியரசுடன் இலங்கை நெருங்கிய நட்புறவைப் பேணியிருந்தது.
இதன் ஊடாக இலங்கையின் கைத்தொழில்துறைக்கு ரஷ்யா பாரிய ஒத்துழைப்பை வழங்கியது.
இலங்கையின் தேயிலை கொள்வனவாளர்களில் இன்றும் ரஷ்யா முதன்மை வகிக்கின்றது.
1974 ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்கவின் பின்னர் இலங்கை அரச தலைவர் ஒருவர் ரஷ்யாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
அண்மையில் நடைபெற்ற கோவா மாநாட்டின் போது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு தமது நாட்டிற்கு வருகை தருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த விஜயத்தின் போது அந்நாட்டு அரசாங்கத்தின் பல சிரேஷ்ட தலைவர்களை சந்தித்துக் கலந்துரையாட திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இருநாடுகளுக்கும் இடையே வர்த்தக மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை முன்னோக்கி கொண்டு செல்லுதல் உட்பட, நீண்ட கால இருதரப்பு உறவுகளின் முன்னேற்றம் தொடர்பிலும் இந்த உத்தியோகப்பூர்வ விஜயத்தின் போது கலந்துரையாடப்படவுள்ளது.
கடற்றொழில், சுற்றுலாத்துறை, கலாசாரம் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகள் தொடர்பான இருதரப்பு உடன்படிக்கைகள் சிலவும் இதன்போது கைச்சாத்திடப்படவுள்ளன.
இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சர் எஸ்.பி.நாவின்ன உள்ளிட்ட அமைச்சர்கள் சிலர் கலந்துகொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவின் உத்தியோகப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.