களுதாவளை துப்பாக்கிப் பிரயோகம் :ஒருவர் கைது



காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் மீதான துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணைகளின் மூலம் கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேகநபர் நேற்று (28) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.



மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும், கிரான் பகுதியைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, சம்பவத் தினத்தன்று அவர் கொழும்பில் இருந்துள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

எனினும், மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று (01) ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செயலகத்தில் பணிபுரியும் குறித்த நபர் பிரிதொருவரின் தனிப்பட்ட சாரதியாக பணிபுரிகின்றமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் விசேட பொலிஸ் குழுக்கள் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

மட்டக்களப்பு களுதாவளை பகுதியில் நேசகுமார் விமல்ராஜ் கடந்த மாதம் 22 ஆம் திகதி மாலை அடையாளம் தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்தார்.

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நேசகுமார் விமல்ராஜ் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் தொடந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.