கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா..
இலங்கை – தமிழக மீனவர்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் நிகழ்வாகும்.
எனினும் இன்று நடைபெற்ற திருவிழாவை தமிழக யாத்திரியர்கள் புறக்கணித்த நிலையில் இலங்கையின் யாத்திரியர் மாத்திரமே கலந்துகொண்டிருந்தனர்.
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா திருப்பலி இன்று (12) காலை ஒப்புக்கொடுக்கப்பட்டது
யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் அருட்திரு ஜோசப் ஜெயரட்ணம் அடிகளார் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்ட திருப்பலியில் நெடுந்தீவு பங்குதந்தையும் யாழ். மறை மாவட்ட கச்சத்தீவு பரிபாலகருமான அருட் திரு அண்டனி ஜெயரஞ்சன் அடிகளார் உள்ளிட்ட பல குருக்கள் துறவியர் கன்னியாஸ்திரிகள் கலந்துகொண்டனர்.
இம்முறை திருவிழாவில் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் சுமார் 7000 பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இன்றைய திருவிழாவில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன உள்ளிட்ட கடற்படையின் உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
மேலும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கன் வேதநாயகனும் கலந்துகொண்டிருந்தார்.
இந்நிலையில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான மீனவர் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காமையால் இம்முறை கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பதாக தமிழக மீனவர்கள் அறிவித்துள்ளதாக யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதுவர் ஏ.நடராஜன் நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த மீனவரின் உடலை ஏற்க மறுப்புத் தெரிவித்து, தங்கச்சிமடத்தில் ஆறாவது நாளாகவும் மீனவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களை சந்தித்து கலந்துரையாடினார்
.

